மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் தேசிய திட்டம் ஆரம்பம்

அரசாங்கம் இதுவரை ரூ 4,000 மில்லியன் செலவு; போஷாக்கான தலைமுறையை உருவாக்கும் இலக்கு

பால்மா இறக்குமதி மற்றும் பால் உணவுகளுக்காக வருடாந்தம் செலவாகும் 10,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருந்தொகை பணத்தை மீதப்படுத்துவதற்காகவும் நாட்டின் பிள்ளைகளை போஷாக்கான ஒரு தலைமுறையாக கட்டியெழுப்பவும் தேசிய பாற் பண்ணையாளர்களை வலுவூட்ட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இத் திட்டத்தின் ஒரு கட்டமாக பாடசாலை பிள்ளைகளுக்கு பசும்பால் வழங்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (23) இரத்தினபுரி, கலவான, கஜுகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் காலையில் பசும்பால் பக்கற் வழங்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய “பால் உற்பத்தியில் தன்னிறைவடைந்த தேசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சு மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு ஆகியன இதற்கு பங்களிப்பு அளிக்கின்றது.

இத் திட்டத்தின் முதலாம் கட்டமாக தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான 4 இலட்சம் மாணவ மாணவிகளுக்கு தினசரி 150 மில்லி லீற்றர் பசும்பால் வழங்கப்படவுள்ளதுடன், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய சுவையூட்டப்பட்ட பாலுக்கு பதிலாக தரம் உறுதி செய்யப்பட்ட திரவப் பால் பக்கற் வழங்கப்படும். பயன்படுத்தப்பட்ட பால் பக்கற்களை மீள் சுழற்சி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அறிவும் ஆரோக்கியமும் கொண்ட சமூகம் ஒரு நாட்டின் வெற்றியாகும் எனத் தெரிவித்தார். நாட்டின் சனத்தொகையில் சுமார் 15 வீதமானவர்கள் போஷாக்கு குறைபாட்டை கொண்டிருப்பது நாடு என்ற வகையில் ஒரு நல்ல நிலைமையல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் சவாலில் தேசிய பசும்பால் பயன்பாட்டை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் கிராமிய பாற்பண்ணையாளர்களை வலுவூட்டுவதன் மூலம் கிராமிய வறுமையை குறைத்து சிறந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்வது இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் செயற்திட்டத்திற்காக 2019ஆம் ஆண்டுக்காக இதுவரை அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் 1,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதுடன், பால் பக்கட்டுகளை விநியோகிக்கும் பொறுப்பை கார்கில்ஸ் மற்றும் மில்கோ நிறுவனங்கள் ஏற்றிருக்கின்றன. குறைகளை நிவர்த்தி செய்து தேசத்தின் பிள்ளைகளினதும் தேசத்தினதும் எதிர்காலத்திற்காக இந்த செயற்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்களென தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை