அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா: தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் சம்பியன்

அம்பாறை மாவட்ட விளையாட்டு பெரு விழாவில் 27 தங்கப்பதக்கங்களைப் பெற்ற தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலக பிரிவு 2019ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழா கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அம்பாறை நகர சபை மைதானத்தில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வீ.டி.எஸ்.பண்டாரநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அம்பாறை மாவட்ட விளையாட்டு பெரு விழாவில் மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீர,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலக பிரிவு 27 தங்கப்பதக்கங்களையும், 14 வெள்ளிப்பதக்கங்களையும், 9 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. அம்பாரை பிரதேச செயலகப்பிரிவு 18 தங்கப்பதக்கங்களையும், 24 வெள்ளிப்பதக்கங்களையும், 14 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

உகண பிரதேச செயலக பிரிவு 16 தங்கப்பதக்கங்களையும், 09 வெள்ளிப்பதக்கங்களையும், 10 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. பதியதலாவ பிரதேச செயலகப்பிரிவு 08 தங்கப்பதக்கங்களையும், 08 வெள்ளிப்பதக்கங்களையும், 5 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவு 7 தங்கப்பதக்கங்களையும், 5 வெள்ளிப்பதக்கங்களையும், 5 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, மெய்வல்லுனர் போட்டியில் ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவு 6 தங்கப்பதக்கங்களைப் பெற்று ஆண்களுக்கான மெய்வல்லுனர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

நிந்தவுர் பிரதேச செயலக பிரிவு 4 தங்கப்பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், கல்முனை பிரதேச செயலகப்பிரிவு 2 தங்கப்பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

மெய்வல்லுனர் பெண்கள் பிரிவில் பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவு 7 தங்கப்பதக்கங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. அம்பாறை பிரதேச செயலக பிரிவு 3 தங்கப்பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நீண்டகாலமாக சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீரராக கல்முனை பிரதேச செயலகப் பிரிவை (முஸ்லிம்) சேர்ந்த ஜே.எம்.இன்ஸாப் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கள மெய்வல்லுனராக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மிப்ரான் தெரிவானார்.

பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீராங்கனையாக அம்பாறை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஹாஸினி தெரிவு செய்யப்பட்டார். அம்பாரை மாவட்ட விளையாட்டு பெரு விழாவில் 2019ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த வீரராக கல்முனை பிரதேச செயலக (முஸ்லிம்)பிரிவைச் சேர்ந்த ஜே.எம்.இன்ஸாப் தெரிவாகியமை விசேட அம்சமாகும்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை