வீனஸ் வில்லியம்சை அறிமுக போட்டியிலேயே வீழ்த்திய 15 வயது வீராங்கனை

ஐந்து முறை விம்பிள்டன் சம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை, 15 வயது இளம் வீராங்கனை ஒருவர் அறிமுக போட்டியிலேயே வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (வயது 39), சக நாட்டைச் சேர்ந்த கோரி காஃப் (வயது 15) மோதினர். கோகா என்ற புனைப் பெயர் கொண்ட கோரி காஃப், தகுதிச் சுற்றின் மூலமாக பிரதான சுற்றுக்கு முன்னேறியவர்.

ஐந்து முறை விம்பிள்டன் சம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ், தனது அனுபவ ஆட்டத்தால் கோரி காஃப்பை எளிதில் வீழ்த்தி விடுவார் என்றே ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அறிமுக போட்டியிலேயே அசத்திய கோரி காஃப், அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து வீனசுக்கு அதிர்ச்சி அளித்தார். வெறும் 35 நிமிடங்களில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் கோரி காஃப்பின் அதிரடி நீடித்தது. அடுத்தடுத்து மூன்று புள்ளிகளைப் பெற்றார். பின்னர் பிரேக் செய்த, வீனஸ் சற்று முன்னேறினார். எனினும் அவரால் காஃப்பின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டையும் காப் கைப்பற்றி, வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற கோரி காஃப் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். ஆனந்தத்தில் கதறி அழுதார். அவருக்கு வீனஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தனது வெற்றி குறித்து பேசிய காஃப், “இந்த வெற்றியை எப்படி உணர்வது என்றே எனக்கு தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் முதல் முறையாக அழுதிருக்கிறேன். இதுபோன்ற வெற்றி கிடைக்கும் என நினைத்து பார்த்ததில்லை. வீனஸ் என்னை பாராட்டி ஊக்கம் அளித்தார். எனது வெற்றியைப் பார்த்து என் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றார்.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை