தங்கப்பதக்கம் வென்ற மட்டக்களப்பு வீரர்கள் கௌரவிப்பு

45 வது தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி போட்டி நிகழ்ச்சியில் தங்கப்பதக்கத்தையும் மற்றும் வெள்ளிப்பதக்கத்தையும வென்ற மட்டக்களப்பு மாவட்ட அணியைச் சேர்ந்த வீரர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது

இந்த விசேட நிகழ்வில் குறித்த விரர்களை மாவட்ட செயலக வளவில் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு அன்பளிப்புக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கடற்கரை கபடி மகளிர் அணிக்கான போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று தேசிய மட்டத்திலான சாம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்ட கிரான் பிரதேச கருணா ஜக்கிய விளையாட்டுக் கழக அணியினர் மற்றும் ஆண்கள் பிரிவுக்கான கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்கு பற்றி வெள்ளிப்பதக்கம் வென்ற மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவு வீரர்களும் கௌரவிக்கப்பட்டதாக மாவட்ட அரச ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வைத்தார். அத்துடன் குறித்த வெற்றி பெற்ற வீரர்களை கௌரவித்து கனடாவில் வசிக்கும் முன்னாள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ரீ.சாந்திகுமார் ஒரு தொகைப்பணம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது. இந்த விசேட நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி சிறிகாந்,பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட விளையாட்டு உத்தி​ேயாகத்தர் ஈஸ்பரன்,மாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எம்.வை.ஆதம் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அணியின் பயிற்றுவிப்பாளர் மதன் சிங்,கிரான் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சிவகுமார்,உதவி பறயிற்றுவிப்பாளர் ஆர்.கோகேந்திரன் ஆகியோரும் இந் நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் அன்பளிப்பு வழங்கி வைத்தும் கௌரவிக்கப்பட்டதும்,மகளிருக்கான கபடிப்போட்டியில் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.கஜேந்தினி,எஸ்.கோகுலவாணி,ரீ.சோபினி,எம்.போகலிக்கா,எஸ்.ஜதுசிகா ஆகியோர் திறமையாக விளையாடி தங்கப்பதக்கத்தை சுவிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த கிராமங்களில் வசிக்கும் இந்த வீரர்களின் சாதனை மாவட்டத்துக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

இன்று எமது மாவட்டம் விளையாட்டுத்துறையில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் முன்னேற்றமடைந்து வருவது அண்மைக்கால நிகழ்வுகளின் மூலம் உணர முடிகின்றது.இதே போல் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க இவ்வாறான விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க சகல அரச பணியாளர்களும் , விளையாட்டு ஆர்வலர்களும்முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அந்த மகளிர் அணியின் தேசிய மட்டப்போட்டியில் சாதனை படைத்து ஆட்ட நாயகியாக தெரிவு செய்யப்பட்ட ஓர் வீராங்கனையின் சகோதரன் இன்று காலை மரணித்த சம்பவம் அறிந்து துயரம் கொள்வதுடன் அன்னாரின் குடும்மத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

(மட்டக்களப்பு சுழற்சி, பெரிய போரதீவு தினகரன் நிருபர்கள் )

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை