நாட்டில் மறைமுக வரியை குறைத்து நேரடி வரியை அதிகரிக்க வேண்டும்

மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரிகளை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்தால் எதிவரும் வருடங்களில் 15 வீத வரியை மேலும் இரண்டு வீதத்தால் குறைக்க முடியும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் வருமான வழியையும் வலுப்படுத்தவேண்டியுள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானத்தில் 80 வீதத்துக்கும் அதிகமான பங்கு மறைமுக வரிகளிலிருந்தும், 20 வீதத்தைவிடக் குறைந்தளவே நேரடி வரியாகவும் கிடைக்கிறது.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இதனை மாற்றுவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் வருடங்களில் வரி வீதத்தை 15 வீதத்திலிருந்து மேலும் இரண்டு வீதங்களால் குறைக்க முடியும் என்றார்.

தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

அரசாங்கம் குறுகிய காலத்தில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறை என பல துறைகளில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிக்காத வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா மஹரூப் (ஐ.தே.க)

கடந்த ஆட்சிக் காலத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக எந்தவிதமான கேள்விப் பத்திரங்களும் கோரப்படாமலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. எனினும் எமது ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான முறைகேடுகளுமின்றி வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு பாலங்கள் இடிந்துபோகும் நிலையில் காணப்படுகின்றன. இவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்தாயிரம் மாணவர்கள் கடந்துசெல்லும் குறிஞ்சாகேணி பாலத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை எந்த அபிவிருத்திகளையும் முன்னெடுக்காத நிலையில் பல அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

சிவஞானம் சிறிதரன் (த.தே.கூ)

24 வருடங்களுக்கு முன்னர் நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்றாகும். நவாலி தேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்த போது இத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத் தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த அப்போது ஜனாதிபதியாகவிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கவலை வெளியிட்டிருந்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் இங்கு குடியிருந்த போதே இவர்கள் கொல்லப்பட்டனர். இனப் படுகொலைகளுக்கு நீதியில்லாத நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பெருந்தெருக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிங்கள மொழியிலேயே பெயர்கள் வைக்கப்படுகின்றன.

தமிழ் மொழியும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக இருக்கும் நிலையில் பல திட்டங்களுக்கு சிங்கள மொழிகளிலேயே பெயர்களை வைக்கின்றனர். இது சிங்கள மொழி திணிப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது. வீதிகளின் அபிவிருத்திக்காக பணம் ஒதுக்கப்படுகின்ற போது மகநெகும மற்றும் வற் வரி போன்றவற்றுக்காக ஒரு பகுதி கழிக்கப்படுகிறது. இதனால் வீதிகளை எவ்வாறு சரியான முறையில் அபிவிருத்தி செய்ய முடியும். கிளிநொச்சியில் பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்ட போதும் இதுவரை ஒரு வீதி கூட புனரமைக்கப்படவில்லை.

எம்.எஸ்.மரிக்கார் (ஐ.தே.க)

குறைநிரப்பு பிரேரணையின் ஊடாக பாராளுமன்றத்தின் அனுமதியைக் கோரும் 65 பில்லியன் ரூபாவில் 2.5 பில்லியன் ரூபாய் மாத்திரமே தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. எஞ்சிய தொகை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான கொடுப்பனவுகளுக்கே பயன்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அரசாங்கம் குறைவாகவே கவனிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐரோட் வேலைத்திட்டத்தில் நிர்வாக ரீதியாக காணப்படும் காலதாமதமே உள்ளது. 2016ஆம் ஆண்டு கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஐரோட் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்டபோதும் இதில் காலதாமதம் ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கு பிரதமரின் அமைச்சின் ஊடாக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரவிந்தகுமார் (ஐ.தே.க)

மலையகப் பகுதிகளில் உள்ள வீதிகள் பல பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பதுளை மாவட்டத்தில் தோட்டப் புறங்களில் 2000ற்கும் அதிகமான கிலோமீற்றர் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. பிரதேச சபைகள் மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஊடாக 500 கிலோ மீற்றர் வீதிகளையாவது புனரமைக்க முடியாமல் போயுள்ளது.

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வீதிகளின் புனரமைப்பு மிகவும் அவசியமானது. குறிப்பாக சுகாதார தேவைகளுக்காக வீதிகளைப் பயன்படுத்தும்போது புனரமைக்கப்படாத வீதிகளால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. பிரசவத்துக்குச் செல்லும் தாய்மார் வீதிகளில் உயிரிழக்கும் நிலைமை மலையகப் பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகிறது.

அமீர் அலி (ஐ.தே.க)

சிறிலங்கா அமரபுர நிக்காவினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வீதி அபிவிருத்திப் பணிகளை சம்பந்தப்பட்ட அமைச்சரும் அவரின் அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளும் சிறப்பாக செயற்படுத்துகின்றனர்.

ஐ ரோட் திட்டம் பற்றி பலர் பேசினார்கள். நீண்ட நாட்களாக இத் திட்டத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இதில் அமைச்சர் தனது கெட்டித்தனத்தைக் காட்டவேண்டும். அதிவேக நெடுஞ்சாலை எல்லாப் பிரதேசம் பற்றிப் பேசப்படுகின்ற போதும் கிழக்குப் பற்றி எவரும் பேசுவதாகத் தெரியவில்லை. எதிர்வரும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலை கிழக்கையும் ஊடறுத்துச் செல்லும் வகையில் அமைய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் 2000ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 34 பேர் எந்தக் குற்றச்சாட்டுக்களும் இல்லாதவர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். 14 பேர் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று டொக்டர் ஷாபிக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லையென கூறப்பட்டுள்ள போதும் அவரை விடுவிக்கவில்லை. அவர் அவசரமாக விடுதலை செய்யப்பட வேண்டும். கலவரங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடைத்தவர்கள் யாரோ அவர்களின் ஊடாகவே அவை கட்டப்படவேண்டும்.

இவற்றுக்கான நஷ்டஈடுகளை உடனடியாக வழங்கி மீளக்கட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளு0ம் இன்னல்களை எடுத்துக் கூறியிருந்தோம். அவர்மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம்.

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்

பதுளை செங்கலடி வீதி சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. மலையகப் பகுதிகளில் உள்ள சிறிய வீதிகள் மற்றும் தோட்ட வீதிகள் செப்பனிடப்படும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில காலதாமதங்கள் இருந்தாலும் அபிவிருத்திப் பணிகள் முன்னேடுக்கப்படுகின்றன.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்களில் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் விரும்புகின்றனர். அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது அவர்ளுக்கு தோளோடு தோள்நின்று செயற்பட விரும்புகின்றோம். மலைய மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தொடர்ந்தும் பல உறவுகள் காணப்படுகின்றன என்றார்.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை