தெரிவுக்குழு விசாரணையால் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கு அநீதி ஏற்படாது

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளில் உச்ச நீதிமன்றமோ, மேன்முறையீட்டு நீதிமன்றமோ சட்ட மாஅதிபரோ தலையீடு செய்ய முடியாதென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான விசாரணையை நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை கடந்த அரசு கவனத்திற் கொள்ளவில்லை என்று கூறிய அவர், தெரிவுக்குழு விசாரணையினால் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கு அநீதி ஏற்படாது என்றும் தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான சர்ச்சையின் போது கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் பிரதம நீதியரசருக்கு எதிராக 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கினார்கள். இந்தத் தெரிவுக்குழுவினூடாக வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை.

இதற்கு முன்னர் வெளிவராத பல விடயங்கள் தெரிவுக்குழுவில் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற செயற்பாடுகளில் நீதிமன்றங்களுக்கோ சட்ட மாஅதிபருக்கோ தலையிட முடியாது. பாராளுமன்றத்தை அவமதிக்க கூடாது .

செப்டம்பர் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவும் இவ்வாறு தெரிவுக்குழு நியமித்தது. ஜனாதிபதியையோ பிரதமரையோ தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூறினால் வர வேண்டும். யாருக்கும் வரமுடியாது என்று மறுக்க முடியாது.என்றார்.

மஹிந்த அமரவீர எம்.பி

சட்டப் பிரச்சினைகளின் போது சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை சபாநாயகர் பெறுவார். ஆனால் சட்ட மாஅதிபரின் கடிதத்தை அவர் சபையில் அறிவிக்கவில்லை. 21 தாக்குதல் தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இங்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு தாக்கல் செய்தோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.300 பேர் இறந்தார்கள் என்றார்.

நிமல் லங்சா எம்.பி

21 தாக்குதலில் கத்தோலிக்க மக்கள் இறந்தார்கள்.தெரிவுக்குழு நியமிக்க நானும் கையெழுத்திட்டேன். ஆனால் தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் சபையில் சமர்ப்பிக்க தவறியுள்ளார்.

விமல் வீரவங்ச எம்.பி

ரியலிட்டி நிகழ்ச்சியாக தெரிவுக்குழுவை சபை முதல்வர் சித்தரித்தார்.இங்கு ஹிஸ்புல்லா,ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் அப்பாவிகளாக காண்பிக்கப்பட்டார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

நெடுஞ்சாலை அமைச்சின் குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இன்று ஆராயப்பட இருக்கிறது. தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகர் தனது முடிவை அறிவித்துள்ளார். அது சரியோ பிழையோ அதன் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க,

கத்தோலிக்கர் மட்டுமன்றி சகல சமூகங்களும் 21 தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை