இலங்கையில் முகாம்களை அமைக்க எந்த நாட்டுக்கும் அனுமதி வழங்க முடியாது

அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்கு வருவதற்கும் இங்கு படைமுகாம் அமைக்கவும் உடன்படிக்கை கைச்சாத்திட அரசாங்கம் முற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பாதகம்,அழுத்தங்களை கொடுக்கும் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் எவ்வித தேவைகளும் எமக்கு இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்கு வருகை தருவதற்காக அமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கை கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.இச்சூழ்நிலையில்

நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே பாதுகாப்பு இராஜாங்க மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன, மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சியும், சில தரப்புகளும் அரசாங்கத்துக்கு எதிராக புதிய குற்றச்சாட்டை சுமத்தயுள்ளன. அமெரிக்க இராணுவப் படைகள் இந்நாட்டுக்கு வருகைதரவும், எமது நாட்டில் முகாம்களை அமைக்கவும் அரசாங்கம் உடன்படிக்கை செய்யவுள்ளதாக கூறுகின்றனர். அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். இதுதொடர்பில் நான் பாராளுமன்றத்தில் விளக்கமிளத்துள்ளேன். அமெரிக்காவுடன் இதுபோன்றதொரு உடன்படிக்கையில் கைச்சாத்திட நாங்கள் தயாராக இல்லை. எவ்வித உடன்படிக்கைகளும் இதுவரை கைச்சாத்திடப்படவுமில்லை.

அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல வேறு எந்தவொரு நாட்டுக்கும் எமது நாட்டில் படை முகாம்களை அமைக்க அனுமதியளிக்க மாட்டோம். நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அல்லது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கையெடுக்காது.

உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே கைச்சாத்திடப்படும். அத்துடன், அவரே இவ்வாறான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட முடியும். நாட்டுக்கு பாதகமாக உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை