சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ராஜினாமா அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிர்வாகப் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக கிறிஸ்டின் லகார்ட் அறிவித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக அவர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவை வெளியிட்டுள்ளார். ஐ.எம்.எப்பில் இருந்து செப்டெம்பர் 12 அன்று விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை பதவிக்காக நான் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த செயற்பாட்டுக்காகவும் நிதியத்தின் நலனுக்காகவும் நான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரான்ஸ் அமைச்சராக இருந்த லகார்ட் 2011 தொடக்கம் ஐ.எம்.எப் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

உலகின் சக்திவாய்ந்த 10 பெண்களில் ஒருவராக தொடர்ந்து இடம்பெற்று வரும் 63 வயதான லகார்ட், 2010இல் கிரேக்கத்தின் மீதான கடன் பிணையை அடுத்து ஐ.எம்.எப் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ் ஐ.எம்.எப் வழங்கிய மிகப் பெரிய கடன் பிணையான 57 பில்லியன் டொலர் உடன்படிக்கையை ஆர்ஜன்டீனாவுடன் கடந்த ஆண்டு எட்ட முடிந்தது.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை