ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை: ‘அமைதி திட்டத்திற்கு’ இணக்கம்

தலிபான்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட செல்வாக்கு மிக்க ஆப்கானியர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் 18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி திட்டம் ஒன்றுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொல்லப்படுவதை முடிவுக்குக் கொண்டுவந்து “இஸ்லாமிய வரையறைக்குள்” பெண்ணுரிமையை பாதுகாப்பதற்கு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறுவது தொடர்பில் தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையில் பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையிலேயே கடப்பாடு அற்ற இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

ஆப்கான் மீது 2001 ஆம் ஆண்டு படையெடுத்த அமெரிக்கா அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்களை வெளியேற்றியது.

அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையில் நீடிக்கும் பேச்சுவார்த்தை நேற்று முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் பங்கரவாதிகளின் தளமாக மாற்றப்படமாட்டாது என்ற உறுதிப்பாட்டுடன் அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்து உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறும் காலக்கெடுவை வெளியிடும் வரை ஆப்கான் அரசுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குச் செல்வதை தலிபான்கள் மறுத்து வருகின்றனர்.

எனினும் கட்டாரில் இடம்பெற்ற இரண்டு நாள் மாநாட்டில் ஆப்கான் சிரேஷ்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பங்கேற்று எதிர்காலத்தில் நடைபெற எதிர்பார்க்கும் உத்தியோபூர்வ பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை இட முயற்சித்தனர்.

“தலிபான்களுடனான ஆப்கானியரின் சந்திப்பும் பெரும் வெற்றியளித்துள்ளது” என்று அமெரிக்க முன்னணி பேச்சுவார்த்தையாளர் சல்மே கலில்சாத் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு உடன்படிக்கை அல்ல பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான அடித்தளமாககும்” என்று ஆப்கான் பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மாரி அக்ரமி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளது. “இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்தது இதன் சிறந்த அம்சமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைதித் திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை திரும்ப அழைத்துக்கொள்வது மற்றும் பிராந்திய சக்திகளின் தலையீடுகளை அனுமதிப்பதில்லை போன்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தான் “அன்றாடம் வேதனையை” சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆப்கானிஸ்தான் நாட்டில் மற்றொரு போருக்கு சாட்சியமாக இருக்காது என்பதோடு முக்கிய மற்றும் தீர்க்கமான சமூகத்தின் வெவ்வேறு நிலைகளுக்கு இடையே இணக்கம் எட்டப்பட்டது” என்று அந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோதல்களால் 45,000க்கும் அதிகமான பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மாதங்களில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 1,200 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் உயிரிழப்பை நிறுத்துவதற்கு இரு தரப்பும் உடன்பட்டிருப்பதோடு பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகள் மீதான தாக்குதல்களை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் காசி நகரில் அரச கட்டிடம் ஒன்றை இலக்கு வைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பல பாடசாலை சிறுவர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று ஆப்கான் அரச படை கடந்த திங்களன்று பக்லான் மாகாணத்தில் நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக அங்கு பெரும் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இது பற்றி விசாரணை நடத்துவதாக அரசு உறுதி அளித்துள்ளது.

Wed, 07/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக