மியன்மார் இராணுவ தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள்

ரொஹிங்கியர்கள் மீதான வன்முறை

ரொஹிங்கிய சிறுபான்மையினர் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மியன்மார் இராணுவத் தளபதி மின் அங் ஹ்லைங் மற்றும் மேலும் மூன்று இராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 740,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் எல்லை கடந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற வன்முறைகளின் நம்பகமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

“இந்த அறிவிப்பின் மூலம் மியன்மார் இராணுவத்தின் சிரேஷ்ட தலைவர்கள் மீது வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கும் முதல் அரசாக அமெரிக்கா உள்ளது” என்று இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் பிரதித் தளபதி சோ வின், பிரகேடியர் ஜெனரல் தான் ஊ மற்றும் பிரகேடியர் ஜெனர் அவுங் அவுங் ஆகியோர் மற்றும் குறித்த நான்கு அதிகாரிகளின் குடும்பத்தினர் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மின்மார் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டுப் படுகொலைகள், கற்பழிப்பு மற்றும் தீவைப்புகள் மற்றும் கொலைகள் இடம்பெற்றதாக ஐ.நா விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது இன அழிப்பு நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.

2017 ஓகஸ்ட் மாதம் ஆரம்பமான இந்த வன்முறைகளின் முதல் மாதத்தில் மாத்திரம் குறைந்தது 6,700 ரொஹிங்கியர்கள் கொல்லப்பட்டதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மியன்மார் இராணுவம், ரொஹிங்கிய கிளர்ச்சிக் குழு மீதே இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக நியாயம் கூறுகிறது.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை