சவூதிக்கு ஆயுதம் விற்பதற்காக வீட்டோவை பயன்படுத்திய டிரம்ப்

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 8.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பதை தடுக்கும் கொங்கிரஸ் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீட்டோவை பயன்படுத்தியுள்ளார்.

இந்த மூன்று தீர்மானங்களும் அமெரிக்காவின் சர்வதேச போட்டித் தன்மையை பலவீனப்படுத்துவதோடு தமது நட்பு நாடுகளுடனான உறவை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆயுத விற்பனையை தடுப்பதற்கு கொங்கிரஸின் இரு அவைகளும் ஆதரவாக வாக்களித்த நிலையிலேயே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த ஆயுதங்கள் யெமன் யுத்தத்தில் பொதுமக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்று கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர். யெமனில் சவூதியின் செயற்பாடு மற்றும் கடந்த ஆண்டு சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து இவர்கள் கண்டனம் வெளியிட்டனர்.

இந்நிலையில் டிரம்பின் வீட்டோவை ரத்துச் செய்வது குறித்து ஒருசில நாட்களில் செனட்டில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் குடியரசுக் கட்சி தலைவர் மிட்ச் மக்கோனல் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை செனட்டிடம் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவியை ஏற்ற பின் டிரம்ப் இவ்வாறு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது இது முதல் முறையாகும். பாராளுமன்றத்தை விஞ்சி இந்த ஆயுத விற்பனையை மேற்கொள்ள வெள்ளை மாளிகை கடந்த மே மாதம் தேசிய அவசர நிலை ஒன்றை பிரகடனம் செய்தது.

ஈரான் அச்சுறுத்தல் காரணமான இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை