வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடலின் மீது ஏவி இருப்பதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரையான வொன்சானில் இருந்து நேற்றுக் காலை இவை கடலுக்கு மேலால் பாய்ச்சப்பட்டதாக தென் கொரியா வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு ஏவுகணை சுமார் 690 கிலோமீற்றர்கள் சென்றிருப்பதோடு அது ஒரு புதிய வடிவம் போன்று தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் முன்னேற்றகரமான சந்திப்பொன்றை மேற்கொண்ட பின் அந்த நாடு பாய்ச்சும் முதல் ஏவுகணையாக இது உள்ளது.

எனினும் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் இராணுவ ஒத்திகை குறித்து வட கொரியா கோபத்தை வெளியிட்டிருக்கும் நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.

இதனால் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கும் அணு ஆயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தை பாதிக்கப்படலாம் என்று வட கொரியா எச்சரித்திருந்தது. இதில் முதல் ஏவுகணை நேற்று அதிகாலை அளவில் பாய்ச்சப்பட்டதோடு இரண்டாவது ஏவுகணை அரை மணி நேரத்தில் ஏவப்பட்டது.

இந்த இரு ஏவுகணைகளும் 50 கிலோமீற்றர் உயர சுமார் 430 கிலோமீற்றர் தூரம் சென்று ஜப்பான் கடலில் விழுந்ததாக ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதில் ஒன்று புது வகையைச் சேர்ந்தது என்று அமெரிக்கா மற்றும் தென் கொரிய உளவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை அடையவில்லை என்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசர பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணை பாய்ச்சலை வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மேற்பார்வையிட்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த செயற்பாட்டை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்திருக்கும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு, இது பதற்றம் தணிந்திருக்கும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை