இல்லாமற்போன சமத்துவத்தை கட்டியெழுப்பவே பாடுபடுகிறோம்

ஒரே நேரத்தில் அமைச்சராகவும் எதிரணியாகவும் செயற்படும் ஒரே நபர் நானே!

இன்று நாட்டில் சமத்துவமில்லை. மொழிகள் இனங்கள் மதங்கள் மத்தியில் சமத்துவமில்லை. சமத்துவத்தை படிப்படியாக கட்டியெழுப்பி வருகின்றோம் என தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாழங்குடாவில்

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான நிலையத்தினை நேற்று (22) திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அதற்காகவே முழு கிழக்கு மாகாணத்தையும் மையப்படுத்தி எமது அமைச்சின் அலுவலகம் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது மட்டக்களப்புக்கு மாத்திரமான அலுவலகமல்ல.

முழு கிழக்கு மாகாணத்திற்கான எமது அமைச்சின் நிலையமாகும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைக் கூட்டிணைக்கும் நிலையமாக இந்த அலுவலகம் இருக்கும். எமது அமைச்சின் நடவடிக்கைகள் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுத்தான் இருக்கின்றது.

பல கோடி ரூபா பெறுமதியாக அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே போன்று மொழிகளும் போதிக்கப்பட்டு வருகின்றன. தெற்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு தமிழி மொழியை போதிப்பது போல இங்கு தமிழ் ஊழியர்களுக்கு சிங்களத்தை போதித்து வருகின்றோம். எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ், சிங்களம், ஆங்கில ஆசியரியர் பயிற்சிக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்துள்ள தமிழ் ஆசியரியர்களுக்கு இங்கே பயிற்சிகள் நடாத்தப்படும்.

எமது அமைச்சின் கிழக்கு மாகாண நிலையம் மக்களுக்காக முழுமையாக பயன்படுத்தப்படல் வேண்டும்.

எந்தக்காரணங்களுக்காக இந்த அமைச்சு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த விடயங்கள் இங்கு மேற் கொள்ளப்படல் வேண்டும்.

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை