தாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா தடை எச்சரிக்கை

தாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ளும் எச்சரிக்கையை சீன அரசு வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு ஏற்கனவே முறுகலுக்கு உள்ளாகி இருக்கும் சீன மற்றும் அமெரிக்க உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தாய்வானை தனது சொந்த நிலப்பிரதேசமாக குறிப்பிடும் சீனா, தேவை ஏற்பட்டால் படைப்பிரயோகம் மேற்கொண்டு அந்த தீவை சீனாவுடன் இணைப்பதாக எச்சரித்து வருகிறது. அமெரிக்காவுடனான உறவில் தாய்வான் விவகாரம் உணர்வுபூர்வமான ஒன்றாக இருப்பதாக சீனா தொடர்ந்து கூறி வருகிறது.

தாய்வானின் கோரிக்கைக்கு அமைய அந்த தீவுக்கு பீரங்கிகள் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகளை விற்க அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒப்புதல் அளித்ததாக பென்டகன் கடந்த வாரம் கூறியிருந்தது.

தாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிப்பதாக சீனா கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தபோதும் அது பற்றி விரிவாகக் கூறப்படவில்லை.

தாய்வானுக்கு 2.2 பில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கவே அமெரிக்கா புதிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆயுத விற்பனை சர்வதேச சட்டத்தை மீறுவதாக குறிப்பிட்டிருக்கும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கங் ஷுவாங், சீனாவின் இறைமை மற்றும் பாதுகாப்பிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அமெரிக்க நிறுவனங்களுடன் சீன அரசாங்கம் மற்றும் சீன நிறுவனங்கள் எந்த வர்த்தக உறவையும் மேற்கொள்ளாது” என்றும் அவர் குறிப்பிட்டார். சீனா மற்றும் அமெரிக்க இரு நாடுகளும் அடுத்த நாட்டின் இறக்குமதிகள் மீது பரஸ்பரம் வரிகள் விதித்து ஏற்கனவே வர்த்தகப் போர் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை