ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்த வேண்டுகோள்

தற்பொழுது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடமே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  தற்பொழுது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும்,விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

அத்தோடு, இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும், ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும்  வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப்பரீட்சை, ஓகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. வடமாகாணத்தில் 15,213 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3,857 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். வடமாகாணத்தில் 217 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர்- மயூரப்பிரியன்)

 

 

Sat, 07/27/2019 - 13:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை