மட்டக்களப்பில் வெளிவாரிப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் வெளிவாரிப் பட்டதாரிகளை புறக்கணிக்க வேண்டாமெனத் தெரிவித்து, வேலையற்ற பட்டதாரிகள் இன்று(27) விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், தமிழ் முற்போக்கு அமைப்புடன் இணைந்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது,வேலையற்ற பட்டதாரிகளுக்காக அரசாங்கம் தொழில் நியமனம் வழங்கும் விடயத்தில் வெளிவாரிப் பட்டதாரிகளை புறக்கணிக்க கூடாதென வலியுறுத்தப்பட்டது.

வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ள வெளிவாரிப்பட்டதாரிகளுக்கு உடனடியாகவேலைவாய்ப்பு வழங்கப்பட  வேண்டும் உள்ளிட்ட சுலோகங்கள்  எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் தலைவர் எஸ். சிவா கருத்து தெரிவிக்கையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,800 வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர். இவர்களில் வெளிவாரி, உள்வாரியெனப் பார்க்காமல் அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் அரசாங்கம் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். எமது கோரிக்ககைகள் ஏற்றுக்கொள்ளப்படா விட்டால், தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்க வேண்டி வரும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவா தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன்  நிருபர் – எம்.எஸ். நூர்தீன்)

 

 

Sat, 07/27/2019 - 14:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை