தமிழரது தனித்துவத்தை அழிப்பது போராட்ட சிந்தனையை ஏற்படுத்தும்

தமிழ் மக்களது புராதானங்களையும் அவர்களது வரலாற்று தனித்துவத்தையும் அழிப்பதானது அம் மக்களை மீண்டும் போராட்ட சிந்தனைக்குள் தள்ளுகின்ற செயற்பாடகவே அமையும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அவர்களது தனித்துவத்துடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் பகுதியில் இந்து மக்களது உரிமையை நிலைநாட்டுவது மறுக்கப்பட்டுள்ளது. இக் கோயிலானது சுமார் 1000 வருடங்கள் பழைமையான வாரலாற்றைக் கொண்டது. இந் நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி பௌத்த பிக்குகளால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கோயிலின் பொறுப்பாகவுள்ள அம்மையார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு சார்பாக வந்துள்ள போதும் தற்போது தொல்பொருளியல் திணைக்களம் அது தன்னுடைய நிலமெனக்கூறி அதனை பௌத்த பிக்குகள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளைக் கட்டுவதென்பது தற்போது இருக்கக்கூடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதற்காக 2900 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். கூட்டமைப்பின் இச் செயற்பாடு காலத்தின் வடுவாகவே காணப்படுகிறது.

இது தவிர முல்லைத்தீவில் செம்மலை பிள்ளையார் கோயிலிலும், யாழ் வலி வடக்கில் தனியார் காணியொன்றிலும் பௌத்த விகாரை கட்டுவதற்கான வேலைகள் இடம்பெறுகின்றன. இதனூடாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களது நிலமல்ல அனைத்துமே சிங்கள பௌத்தர்களுடைய நிலம் என்ற ரீதியிலேயே செயற்படுகின்றனர். இச் செயற்பாடுகளானது தமிழ் மக்களது இருப்பையும் அவர்களது தனித்துவத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாக காணப்படுகிறது. இச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதனூடாக தமிழ் மக்களை மீண்டும் வன்முறைக்குள் தள்ளுவதாகவே அமையும்.

தமிழ் மக்கள் தமது இருப்பையும் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் மீண்டும் போராட்டப் பாதையில் பயணிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையே எடுக்கத் தூண்டும். தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனித்துவத்தையும் கலாசாரத்தையும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை. இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு இதனை அடக்கிவிடவேண்டுமென நினைத்தால் அதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்றார்.

ரி.விரூஷன்

 

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை