மூவர் உயிரிழப்பு ஐவர் காயம்

லக்ஷ்மி பரசுராமன், அநுராதபுரம் தினகரன் நிருபர்

ஜேர்மனிலிருந்து இலங்கை வந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்த சொகுசு பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த சிதாசிவம் சிவந்தி(53), யாழ்ப்பாணம் திருநல்வேலியைச்சேர்ந்த அவந்தன் கோவியா (30) மற்றும் செல்வநாதன் சிறியால் (12) ஆகியோரே உயிரிழந்திருப்பதனை பொலிஸார் ஊர்ஜிதம் செய்தனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 மணியளவில் மதவாச்சி அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள மஹமளுகொல்லெவ எனும் இடத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த சொகுசு பஸ் வண்டியும் தம்புள்ளை நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நோர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தார் தமது சொந்த ஊருக்குச் செல்வதற்காக தனியார் சொகுசு பஸ் வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்த நிலையிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது பஸ்ஸில் எட்டுபேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி மூவர் உயிரிழந்தனர். எஞ்சிய ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒரு ஆண், ஒரு பெண், இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மதவாச்சிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தையடுத்து சொகுசு பஸ் வண்டியும் லொறியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளபொதும் லொறி சாரதி சம்பவத்தையடுத்து தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

லொறி சாரதியை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை