வௌிவாரிப் பட்டதாரிகள் எவரையும் புறக்கணிக்கவில்லை

மகேஸ்வரன் பிரசாத்

பட்டதாரிகளுக்கான நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளடக்கப்படவில்லையென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்தார்.

உள்ளக பட்டதாரிகளுடன் ஒப்பிடுகையில் வெளிவாரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், வேலைவாய்ப்பு வழங்கும்போதும் வெளிவாரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெரிதாகப் புலப்படுவதில்லை யென்றும் அவர் கூறினார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை நீண்டநாட்களாக நாட்டில் காணப்படும் பிரச்சினையாகும். சில பட்டதாரிகளுடன் கதைக்கும்போது தாம் வேலையற்ற பட்டதாரிகள் என சிலர் பெருமையுடன் கூறுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும். அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியிலிருக்கும் சகல அரசாங்கங்களும் வெட்கப்படவேண்டியதொன்றாகும். எனினும் எமது அரசாங்கம் கணிசமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளது.

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை வழங்க பிரதமர் முடிவுசெய்திருந்தார். இது அரசியல் ரீதியான நியமனம் என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். நாளையதினமும் (இன்று) மற்றுமொரு தொகுதி பட்டதாரிகளுக்கு நியனம் வழங்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பட்டதாரி நியமனங்களை வழங்கவில்லை. பின்புலம் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்காக நாம் எவருக்கும் நியமனங்களை வழங்கவில்லை. எனினும் சில சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக மக்களையும் பட்டதாரிகளைக் குழப்பும் வகையிலும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அரசாங்கம் ஒட்டுமொத்தமாக 16,800 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம் வழங்கும் பட்டதாரி நியமனத்தில் உள்ளக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதில்லையென்ற மற்றுமொரு சேறுபூசும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. சாதாரணமாக பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொண்டால் உள்ளக பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், வெளிவாரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாகவும் காணப்படும். வேலைவாய்ப்புக்களை வழங்கும்போதும் வெளிவாரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புக்கள் பெரிதாக புலப்படுவதில்லை. எனினும், அரசாங்கம் தொழில்வழங்கும்போது எவருக்கும் அநீதி இழைக்கவில்லை.

நாளையதின் (இன்று) பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

முதற்கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்ட பின்னர் செயற்றட்ட அதிகாரிகள் நியமனங்களை வழங்கவுள்ளோம். பட்டதாரியற்றவர்களுக்கு செயற்றிட்ட உதவியாளர்கள் பதவியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதுபோன்று இவ்வருட இறுதிக்குள் பெருந்தொகையானவர்களுக்கு நியமனங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை