முள்ளுத் தேங்காய் உற்பத்தி; இலங்கையில் தடங்கல்கள் ஜனாதிபதியுடன் பேச தோட்ட துரைமார் சம்மேளனம் தயார்

(பி.வீரசிங்கம்)

இலங்கையில் பாம் எண்ணெய் (முள்ளுத்தேங்காய்) கைத்தொழில் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன.

இது தொடர்பாக பல தடவைகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் இதுவரை எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மீண்டும் இதுபற்றி பேசுவதற்கு, திட்டமிட்டுள்ளதாக தோட்டத்துரைமார் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பெருந்தோட்டத்துரைமார் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (24) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே சுனில் பொஹெலியத்த இவ்வாறு தெரிவித்தார். பாம் எண்ணெய் கைத்தொழில்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:500 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதியான முள்ளுத்தேங்காய் கன்றுகள் நாற்றுப் பண்ணைகளில் உள்ளன. இந்நிலையில் முள்ளுத்தேங்காயை பயிரிடுவதற்கு எதிராக அதிகாரபூர்வமற்ற தடை இருப்பதாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளுத் தேங்காயை பயிரிடுவதற்கு எதிரான தடை எப்போது யாரால் விதிக்கப்பட்டது என்பது எவருக்கும் தெரியாமல் உள்ளது. இதனால் புதிதாக கன்றுகளை நடுவதற்கு முடியாமல் இருக்கிறது. நாங்கள் முள்ளுத்தேங்காயை நடுவதற்கு தயாராகும் ஒவ்வொரு முறையும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சூழல் அமைப்புகள் அதனை ஒரு பூதாகரமான விவகாரமாக்கி விடுகின்றன.

இதனால் இதில் தலையிட பொலிஸாரும் பெருந்தோட்ட கம்பனிகளும் கூட அச்சப்படுகின்றன. இதனால் செடிகளை பயிரிட முடியாமல் உள்ளது என்று அவர் மேறும் கூறினார்.

எவ்வாறெனினும் இலங்கையில் 20 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் முள்ளுத் தேங்காயை பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏற்கனவே 11 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் முள்ளுத் தேங்காய் பயிரிடப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல பெருந்தோட்ட கம்பனிகள் முள்ளுத் தேங்காய் விதைகளை இறக்குமதி செய்து நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளன. எனினும் இந்த பண்ணைகளில் உள்ள செடிகள் இப்போது 2 வருடங்களுக்கு மேற்பட்ட மரங்களாகியுள்ளன. விரைவில் இவை பயிரிடப்படாவிட்டால் அவை இயற்கையாகவே அழிந்துபோகும் நிலை உள்ளது. சுமார் 500 மில்லியன் ரூபா வரையிலான கன்றுகள் இவ்வாறு உள்ளன.

இந்தியாவில் 2 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பில் முள்ளுத் தேங்காய் பயிரிடுவதற்கு இந்தியப் பிரதமர் மோடி அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வட்டவளை பெருந்தோட்டக் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பினேஸ் பனன்வல கருத்து தெரிவிக்கையில், தற்போது இலங்கை வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவுக்கு பாம் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. பாம் என்ணெயை பெறுவதற்கு முள்ளுத் தேங்காய் மரத்தை வளர்ப்பது ரப்பர் மரத்தை பேணி வளர்ப்பதை விட இலாபகரமானது. ரப்பரை விட மூன்று மடங்கு இலாபத்தை பாம் எண்ணெய் தோட்டங்களில் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் அதற்கான வேலையாட்களின் செலவு மிகவும் குறைவாகும் என்றார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை