குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு:

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எதிராக 105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ம.ஜ.த-. − காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 16 பேர் இராஜிநாமா கடிதம் அளித்துவிட்டு மும்பையில் தஞ்சமடைந்ததால், கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. ம.ஜ.த- காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க குற்றம்சாட்டியிருந்தது. இதைத்தொடர்ந்து ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கடந்த 18-ஆம் திகதி தாக்கல் செய்தார்.இதன் மீதான விவாதம் 18, 19, 22- ஆம் திகதிகளில் விவாதம் நடைபெற்றது.கர்நாடக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை கூடியதும் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

பேரவைத் தலைவர் அதிருப்தி:

செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பேரவை நடவடிக்கைகள் தொடங்கியபோது எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட 105 பா.ஜக எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், ஆளும் கட்சியினர் இருக்கைகளில் 5-6 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

குமாரசாமி:

ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக எடுத்துள்ள முயற்சிகள் ஜனநாயகத்திற்குப் பெரும் கேடாகும் என்று தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு:

முதல்வர் குமாரசாமி பேசி முடித்ததும், இரவு 7.20 க்கு அவர் கொண்டு வந்திருந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு குறித்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அறிவித்தார். முதலில் குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, வாக்குகளை இருக்கை வரிசைப்படி எண்ண வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் ரமேஷ் குமார், தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்போரை முதலில் எண்ண உத்தரவிட்டார். அதன்பிறகு தீர்மானத்தை எதிர்ப்போரை எண்ணுவதற்கு உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு இரவு 7.40 மணிக்கு நிறைவடைந்தது. இதன் முடிவில், தீர்மானத்திற்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அறிவித்தார். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பங்கேற்காத எம்.எல்.ஏக்கள்:

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவைக்கு வரவழைக்க அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே, காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 17 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ என்.மகேஷ், சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகிய 20 பேரும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சட்டப் பேரவையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 204 ஆக இருந்தது.

ஆளுநரிடம் ராஜிநாமா கடிதம்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநர் வஜுபாய் வாலாவை தனது அமைச்சரவை சகாக்களோடு சந்தித்த முதல்வர் குமாரசாமி, இராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அமைந்த பிறகு, 2018 மே 23-ஆம் தேதி முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வர் பதவியேற்றிருந்தார். 2018-இல் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வரான குமாரசாமி, ஓராண்டு 61 நாள்கள் ஆட்சி செய்தார்.

அமித் ஷா ஆலோசனை

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து அந்த மாநில பா.ஜ.க தலைவர்களுடன் பா.ஜ.க தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா செவ்வாய்க்கிழமை தொலைபேசி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

முக்கியமாக பா.ஜ.க சார்பில் அடுத்து முதல்வராவது யார் என்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது தொடர்பாக கூறுகையில்,

எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதே பெரும்பாலான கர்நாடக பா.ஜ.க தலைவர்களின் விருப்பம். எனினும், கட்சித் தலைமைதான் இறுதி முடிவை எடுக்கும் என்றார்.

இது தொடர்பாக எடியூரப்பா கூறுகையில்,

பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். அதன் பிறகு பா.ஜ.க சார்பில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவோம் என்றார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை