ரி.56 ரக துப்பாக்கி உட்பட கைத்துப்பாக்கிகள் மீட்பு

போதைப்பொருள் கடத்தல்காரரான மாக்கந்துரே மதூஷினால் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் மதூஷ் வழங்கிய வாக்குமூலங்களில் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.இதையடுத்து வெலிவேரிய மதகின் கீழ் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஒன்பது மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகள் இரண்டு மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 02 மகசின்கள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், மதூஷ் வழங்கிய வாக்குமூலங்களுக்கமைய நீர்கொழும்பு களுபொத்த கால்வாயின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இத்துப்பாக்கி பயன்பாட்டுக்கு இலகுவான வகையில் வெட்டி சீர் செய்யப்பட்டிருந்ததாகவும் இவை துருப்பிடிக்காமல் இருக்கும் வகையில் கிறீஸ் டப்பாவுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

மீட்கப்பட்டுள்ள மூன்று ஆயுதங்களும் மேலதிக விசாரணையின் பொருட்டு அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் மதூஷ் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளிலிருந்து அவர் நான்கு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இச்சம்பவங்களை முன்னெடுக்க மதூஷூக்கு உதவி வழங்கியவர்களைக் கண்டு பிடிக்கும் வகையில் அவரது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2017.05.09 ஆம் திகதியன்று பிலியந்தலையில் போதைவஸ்து தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் 2017.02.27 ஆம் திகதியன்று களுத்துறை வடக்கில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 02 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரைக் கொலை செய்த சம்பவம், 2018.03.06 ஆம் திகதியன்று அக்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் கொஸ்மல்லி என்றழைக்கப்படும் பண்டிதகே சாந்தகுமார என்பவரைக் கொலை செய்து அவரது தலையை துண்டித்து அளுத்கடை பகுதியில் வைத்த சம்பவம் மற்றும் 2018.11.05 ஆம் திகதியன்று மஹரகம பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வைரக்கல்லை கொள்ளையடித்த சம்பவம் ஆகியவற்றுடன் மதூஷ் தொடர்புபட்டிருப்பது உறுதியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை