இலங்கை 2-0 என முன்னிலை

பங்களாதேஷ் -- இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2--0 என கைப்பற்றியிருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1--0 என முன்னிலை பெற்ற நிலையில் பங்களாதேஷ் அணியினை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டிருந்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றார்.

இப்போட்டிக்கான பங்களாதேஷ் அணி, இந்த ஒருநாள் தொடரை தக்கவைத்துக்கொள்ள இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைனிற்கு பதிலாக தய்ஜூல் இஸ்லாமிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியோடு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோருக்கு பதிலாக அகில தனன்ஜய மற்றும் இசுரு உதான ஆகியோர் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த சௌம்யா சர்க்கார் வெறும் 11 ஓட்டங்களுடன் நுவன் பிரதீப்பின் வேகத்திற்கு இரையாகினார். அதனை அடுத்து பங்களாதேஷ் அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் வெறும் 19 ஓட்டங்களை பெற்று ஏமாற்றம் தந்தார்.

தமிம் இக்பாலை அடுத்து பங்களாதேஷ் அணி, அகில தனன்ஜயவின் சுழலுக்கு தடுமாறத் தொடங்கி, மேலும் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. தனன்ஜயவின் சுழலில் ஆட்டமிழந்த மொஹமட் மிதுன் 11 ஓட்டங்களையும், மஹமதுல்லா 6 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

அதனை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய துடுப்பாட்ட வீரராக வந்த சபீர் ரஹ்மான் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அரைச்சதம் பெற்றிருந்த சப்பீர் ரஹ்மான் இம்முறை ஆட்டமிழக்கும் போது 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சபீர் ரஹ்மானை அடுத்து மொசாதிக் ஹொசைனும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

பங்களாதேஷ் அணியின் ஏழாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன் ஜோடி போராட்டமான முறையில் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தது. பின்னர், பங்களாதேஷ் அணியின் ஏழாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த மெஹிதி ஹஸன் 43 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அத்தோடு, இந்த இணைப்பாட்டத்துடன் சரிவிலிருந்து மீண்டு கொண்ட பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முஷ்பிகுர் ரஹீம் அவரது 37ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன், 110 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 98 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்த 98 ஓட்டங்கள் மூலம் சதத்தை இரண்டு ஓட்டங்களால் தவறவிட்ட முஷ்பிகுர் ரஹீம் இந்த ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைச்சதத்தினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அகில தனஞ்சய, இசுரு உதான மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 239 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அவிஷ்க பெர்னாந்து மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் களம் வந்தனர்.

இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக வெறும் 15 ஓட்டங்களை பெற்றவாறு வெளியேறினார். எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து ஒருநாள் போட்டிகளில் தான் பெற்றுக்கொண்ட இரண்டாவது அரைச்சதத்துடன் இலங்கை அணிக்கு பலம் சேர்த்தார். அதிரடியான முறையில் துடுப்பாடிய அவிஷ்க பெர்னாந்து 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க பெர்னாந்துவினை அடுத்து குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தார். இதன் பின்னர், குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டத்தோடு இலங்கை அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 242 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக அஞ்சலோ மெத்திவ்ஸ் ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அவரின் 39ஆவது அரைச்சதத்தோடு 57 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாந்து தெரிவாகினார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி, 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் தடவையாக சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடர் ஒன்றில் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி புதன்கிழமை (31) இதே கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை