அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் போதை விழிப்புணர்வு ஊர்வலம்

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாந் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பாவனை தடுப்பு நிகழ்வு நேற்று (24) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அக்கரைப்பற்று மாநகர சபை, சீர்திருத்தத் திணைக்களம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை என்பவற்றின் கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அதிபர் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது போதை ஒழிப்பு பற்றி மாணவர்களுக்கு விஷேட விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

இதன்போது போதைப் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் அதனை மாணவர் சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து போதைப் பாவனை ஒழிப்பினை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி வீதி வழியாக இவ்விழிப்புணர்வு ஊர்வலம் சென்றதனைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையினை வந்தடைந்தது. இதன்போது பிரதேசத்தின் பொதுமக்கள் மத்தியில் போதைப் பாவனையினை ஒழிக்கும் விஷேட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை