சூடானில் அவசர தேர்தலுக்கு ஆளும் இராணுவம் அழைப்பு

ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்:

பிரதான எதிர்க்கட்சி கூட்டணியுடனான அனைத்து உடன்படிக்கைகளையும் கைவிட்டிருக்கும் சூடான் இராணுவம் எதிர்வரும் ஒன்பது மாதங்களுக்குள் தேர்தலை நடத்தும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தலைநகர் கார்டூமில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் சர்வதேச கண்டனங்கள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே சூடான் இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த வன்முறைகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை ஒரு கொடிய தாக்குதல் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

சூடானில் சிவில் அரசொன்றை கொண்டுவருவதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் இராணுவம் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையை இராணுவம் முன்னெடுத்தது.

கடந்த ஏப்ரலில் இராணுவ சதிப் புரட்சி ஒன்றின் மூலம் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் நிலைமாற்று இராணுவ கெளன்சில் ஒன்றே சூடானில் ஆட்சியில் இருந்து வருகிறது. புதிய நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது குறித்து இராணுவம், ஜனநாயக ஆதரவு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாகவும் உடன்பாடுகளை ரத்துச் செய்வதாகவும் நிலைமாற்று இராணுவ கெளன்சில் தலைவர் ஜெனரல் அப்தல் பத்தா அல் புர்ஹான் குறிப்பிட்டார்.

பிராந்திய மற்றும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் ஒன்பது மாதத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். நிலைமாற்று இராணுவ கெளன்சில் மற்றும் ஜெனரல்களுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டதாக, நாட்டில் சிவில் அரசொன்றை ஏற்படுத்தக் கோரும் ஜனநாயக ஆதரவு அமைப்பு தலைவர்கள் வெளியிட்ட அறிவிப்பை அடுத்தே இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிரதான ஆர்ப்பாட்ட தளத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியதை அடுத்து கடுமையான துப்பாக்கிச்சத்தங்கள் கேட்டதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் இராணுவ தலைமையகத்திற்கு முன்னால் உள்ள சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதற்கு ஐந்து நாட்களுக்குப் பின் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டார்.

இந்த நிகழ்வு தீவிரம் அடைந்ததை இட்டு கவலை அடைவதாக இராணுவ கெளன்சில் தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. பிரச்சினைக்காரர்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

கார்டூமில் உள்ள ஒரு மருத்துவமனையை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வன்முறைகளில் எட்டு வயது சிறுவன் உட்பட 30 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் சூடான் மருத்துவர்களின் மத்திய குழு, பதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கணக்கில் கொல்லப்படும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்கள் குறித்தி கண்டறிய சுயாதீன விசாரணைக்கு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆபிரிக்க ஒன்றியமும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை