டிரம்பின் பிரிட்டன் விஜயத்தில் லண்டன் எங்கும் ஆர்ப்பாட்டம்

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் பிரெக்சிட் விவகாரத்தில் தலையிடுவார் என்றும் சீனாவின் ஹுவாவி நிறுவனத்திடம் இருந்து 5ஜி தொழில்நுட்பத்தை பெற வேண்டாம் என்று பிரிட்டன் அரச தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கும் நிலையில் அவருக்கு எதிராக லண்டன் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

டிரம்ப் தனது விஜயத்தின் முதல் நாளாக கடந்த திங்கட்கிழமை மகாராணி எலிசபத் மற்றும் இளவரசர் சார்ல்ஸை சந்தித்தார். இந்நிலையில் அவர் நேற்று பிரிட்டன் அரசியல் தலைவர்களை சந்தித்தார். இதன்போது தெரேசா மேக்கு பதில் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரெக்சிட் தலைவர்களை சந்தித்தார்.

பிரெக்சிட் விவகாரத்தில் உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டு வந்த பிரதமர் தெரெசா மே, வரும் வெள்ளிக்கிழமை பதவி விலப்போவதாக அறிவித்திருந்தார். அவரையும் டிரம்ப் சந்தித்து பேசினார்.

பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு அளிப்பதாக டிரம்ப், தி சன் ஊடக நிறுவனத்திடம் தெரிவித்து இருந்தார்.

“பிரிட்டனுடன் சிறந்த நட்பைக் கொண்டாட நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் ட்விட்டரில் டிரம்ப் பதிவிட்டார்.

பிரெக்சிட்டிற்கு பிந்திய வர்த்தக உடன்பாட்டிற்கான தளத்தை அமைக்கவும் டிரம்பின் வருகை உதவும் எனக் கூறப்பட்ட வேளையில், கூடிய விரைவில் அந்த உடன்பாடு இறுதிப்படுத்தப் படும் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நாடான பிரிட்டனுக்கு டிரம்ப் பல கோரிக்கைகளுடனேயே விஜயம் மேற்கொண்டுள்ளார். இதில் ஹுவாவி உபகரணங்களை பிரிட்டன் பயன்படுத்துவதை தடுப்பதும் ஒன்றாகும்.

ஆடம்பர பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணியை சந்தித்த டிரம்ப், அவரை “மிக மிக உன்னதப் பெண்” என வரணித்தார்.

இதனிடையே லண்டன் நகரில் டிரம்புக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், இனவாத எதிர்ப்பாளர்கள் மற்றும் பெண்ணுரிமையாளர்களே டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டிரம்பின் பிரிட்டிஷ் வருகையின்போது அவரைக் கோபமான குழந்தைபோல சித்தரிக்கும் ராட்சத பலுௗனைப் பறக்க விட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரிட்டனில் டிரம்ப் எங்கு சென்றாலும் அந்த பலுௗன் அந்தந்தப் பகுதியில் பறக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை