ஐ.எஸ் முகாமிலிருந்து ஆஸி. சிறுவர்கள் மீட்பு

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் இணைவதற்கு தமது பெற்றோரினால் அழைத்துச் செல்லப்பட்ட ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு அவுஸ்திரேலிய சிறுவர்கள் சிரிய அகதி முகாம் ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய ஐ.எஸ் உறுப்பினரான காலித் ஷரொப்பின் மூன்று அனாதைக் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

உதவிக் குழுக்களுடன் இணைந்து அரசு இந்த சிறுவர்களை இரகசியமாக அப்புறப்படுத்தி இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவர்கள் சிக்கலான நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்கள் செய்த தவறுக்கு தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

ஐ.எஸ் குழு வீழ்த்தப்பட்ட பின் பிடிபட்ட அந்தக் குழுவின் போராளிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளை கையள்வது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த 2013 ஏப்ரல் தொடக்கம் 2018 ஜுன் வரை சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் குழுவுடன் 80 நாடுகளில் இருந்து 40,000 க்கும் அதிகமான சர்வதேச பிரஜைகள் இணைந்ததாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை