மாத்தளை மாவட்டத்தில் கடும் வறட்சி குடிநீர் தட்டுப்பாடு;

மாற்று பயிர்ச்செய்கைக்கு ஆலோசனை

மாத்தளை மாவட்டத்தில் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வில்கமுவ பிரதேச சபைத்தலைவர் கே.ஜி தென்னகோன் தெரிவித்தார்.

தற்போது நிலவும் வறட்சியினால் மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் காணப்படும் ,குளம், ஆறு,கிணறு மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் 39 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்பிரச்சினையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் சிறுநீரகநோயால் பாதிக்கப்பட்ட 3000 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் வில்கமுவ பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேநேரம் மாத்தளை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகளில் போதிய நீர்பாசன வசதி இன்மையால் சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு பதிலாக உப உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு மாற்றாக தேவகுவ நீர்ப்பாசன திட்டத்திற்குட்பட்ட 12 ஏக்கர் வயல் நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் புகையிலை உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளன.

இவ்வாறு சட்டவிரோதமாக வயல்நிலங்களில் புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசன விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது. இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைப்புக்கள், விவசாயிகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் உரியமுறையில் வழங்கப்படவேண்டுமென மாத்தளை மாவட்ட செயலாளர் கே. பெரேரா தெரிவித்தார்.

(மாத்தளை சுழற்சி நிருபர் )

 

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை