மைத்திரி - ஜனாதிபதி; மஹிந்த - பிரதமர்; இணக்கம் காண்பதற்கே பேச்சுவார்த்தை

கோட்டாவுக்கு தமிழ், முஸ்லிம் ஆதரவு கிடைக்காது; SLPP, SLFP கூட்டணி பற்றி தயாசிறி விளக்கம்

ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்‌ஷவையும் நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சுதந்திரக்கட்சி தொடர்ந்து இருப்பதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.ஒன்றிணைந்த எதிரணி வேறு சிலரின் பெயர்களைக் கூறினாலும் மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

கோட்டாபயவை நிறுத்தினால் அவருக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது எனவும் அவரின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் அஞ்சுவதாகவும் கூறினார்.

பொதுஜன பெரமுனவும் சு.கவும் இணைந்து செயற்பட்டால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என்று கூறிய அவர், முதிர்ச்சி பெற்ற

 அரசியல்வாதி என்ற வகையில் புள்ளிவிபர கணக்குகள் அவருக்கு நன்கு புரியும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.கூட்டணியின் கட்டமைப்பு அதன் செயற்பாடுகள் தொடர்பில் அடுத்து பேசப்பட இருக்கிறது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் மற்றும் தலைவர்களுடனும் ஆழமாக ஆராய வேண்டும்.

2018 தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பொதுஜன பெரமுனவுக்கு 50 இலட்சம் வாக்குகளும் ஐ.தே.கவுக்கு 36 இலட்சம் வாக்குகளும் ஐ.ம.சு.முவுக்கு 14 இலட்சம் வாக்குகளும் கிடைத்தன. ஜனாதிபதி தேர்தல் 2018 வாக்காளர் இடப்பின் பிரகாரமே நடைபெற இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு 65 இலட்சம் வாக்குகள் தேவை. பொதுஜன பெரமுனவும் சு.கவும் இணைந்தால் 65 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெல்ல முடியும். பொது ஜன பெரமுன தனித்து போட்டியிட்டால் வெற்றிக்காக மேலும் 15 இலட்சம் வாக்குகள் தேவைப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்பதை எவ்வகையிலும் மாற்ற முடியாது.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்.அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து ஜனாதிபதியை பலப்படுத்த வேண்டும்.மைத்திரிபால சிறிசேன தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

பிரபலம் குறைந்த,மக்களின் விமர்சனத்திற்குரிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சித்தரிக்கப்படுகிறார். ஆனால், பாராளுமன்றத்தில் அவரின் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. இதனால், அவரின் திட்டங்களை முன்னெடுப்பதில் தடையுள்ளது.அவரின் பல திட்டங்கள் தடைப்பட்டுள்ளன.

சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்தால் 5 வருடங்களுக்கு தேசிய சக்தியொன்றுடன் கூடிய முற்போக்கான அரசு உருவாகும்.

நாம் இரு தரப்பும் கூட்டணி சேர்ந்தாலும் முறைகேடுகள் மற்றும்குற்றச்சாட்டுகள் இருக்கும் நபர்களை அரசில் இருப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள். மோசடியான எம்.பிகள் அடுத்த முறை நிராகரிக்கப்பட வேண்டும்.

கேள்வி. எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிக்கும் நபரே ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலையில், அவர் ஜனாதிபதி மைத்திரியின் பெயரை முன்மொழிவாரா?

பதில்.அரசியல் ரீதியில் அவர் முதிர்ச்சி பெற்ற தலைவர்.அவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவருக்குப் புள்ளிவிபரக்கணக்குகள் பற்றி நன்கு தெரியும்.யார் என்ன கருத்துக்களை கூறினாரும் அவர் தௌிவான முடிவில் இருக்கிறார்.

கேள்வி. பொதுஜன பெரமுன தனியாக செயற்பட முடிவு செய்தால் என்ன செய்வீர்கள்.

பதில்.அதற்கும் மாற்று வழிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இறுதி நேரத்தில் உரிய முடிவு எட்டப்படும்.இறுதியில் மைத்திரிபால சிறிசேன மாத்திரம் தான் ஜனாதிபதி வேட்பாளராக எஞ்சுவார்.

கேள்வி.கோத்தாபய ராஜபக்‌ஷவின் பெயர் முன்மொழியப்படுகிறதே.

பதில்.எதிரணியில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவரின் பெயர் கூறப்படுகிறது. கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ இருப்பார். அமைச்சரவையில் பெசில் ராஜபக்‌ஷ,சமல் ராஜபக்‌ஷ,நாமல் ராஜபக்‌ஷ,நிரூபமா ராஜபக்‌ஷ,சசிந்திர ராஜபக்‌ஷ ஆகியோரும் இருப்பார்கள்.30 அமைச்சர்களில் 8 பேர் ராஜபக்‌ஷவினராக இருப்பதை எப்படி ஏற்க முடியும்?

கேள்வி. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயார் என சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியுள்ளது பற்றி.

பதில். அவர் கடந்த ஆகஸ்ட் 26 மாற்றம் இடம்பெற்றது முதல் இதற்கான பின்புலத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அவர் நடுநிலையாக சபாநாயகராக ஒருபோதும் செயற்பட வில்லை. ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தே அவர் கடந்த காலத்தில் செயற்பட்டார் என்றார்.(பா)

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை