500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கு விசேட வேலைத்திட்டம்

ஹற்றன் கல்வி வலயத்திலிருந்து 500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹற்றன் கல்வி வலயத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹற்றன் லக்ஸ்மி மஹால் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தோட்டப்பாடசாலைகளிலிருந்து 500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

இதில் தேசிய மட்டத்தில் நடக்கின்ற பரீட்சைகளில் மாணவர்கள் அனைவரையும் சித்தி பெற வைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை ஆராய்ந்து அதனை வலய பாடசாலை அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், வளவாளர்கள் என அனைவருக்கும் வழங்கியுள்ளோம். அதை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை தரப்படுத்தி புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் மாணவர்களை பெற செய்வதற்கு வழிகாட்டியுள்ளோம். அதனை தொடர்ந்து க.பொ.சாதாரண தரப்பரீட்சையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எனவே எதிர்காலத்தில் 500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவோம் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள்,வளவாளர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை