அமெரிக்காவுடனான பதற்றம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

தென் சீனக் கடலில் அமெரிக்கக் கடற்படைச் செயற்பாடுகளையும், தாய்வானின் சுயாட்சியை அமெரிக்கா ஆதரிப்பதையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே கடுமையாகச் சாடியுள்ளார்.

வர்த்தகப்போரைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் சமரசத்துக்கும் தயார். சண்டைக்கும் தயார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிணக்குகளோ, போரோ பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“சீனாவிடமிருந்து தாய்வானைப் பிரிக்க முற்படுவது யாராக இருந்தாலும், இறுதிவரை அவர்களுடன் போரிடத் தயார். தேவைப்பட்டால் தாய்வானை பலவந்தமாக வசப்படுத்தவும் சீனா தயங்காது. சீனாவைப் பிரிக்க எடுக்கப்படும் எந்த முயற்சிகளும் வெற்றிபெறாது” என்றார் ஜெனரல் வெய்.

வர்த்தகப் போர், தாய்வானுக்கு அமெரிக்கா நல்கும் ஆதரவு, தென் சீனக் கடல் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவற்றால், அமெரிக்க மற்றும் சீன உறவுகள் அண்மை நாட்களில் கசந்து வருகின்றன.

“வர்த்தகப் போரை ஆரம்பித்தது அமெரிக்கா. சீனாவைப் பொறுத்தவரை எங்கள் வாசல் திறந்திருக்கிறது. பேச்சுக்கும் தயார், சண்டைக்கும் தயார்” என்று ஜெனரல் வெய் குறிப்பிட்டார்.

பெய்ச்சிங்கும் வாஷிங்டனும் கடுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. ஒன்று மற்றதன் மீது வரி விதித்ததில் கடந்த சில மாதங்களில் சர்ச்சைகள் வலுத்தன.

கடந்த சனிக்கிழமை ஷங்ரிலா கலந்துரையாடலில் உரையாற்றிய அமெரிக்கத் தற்காலிக பாதுப்புச் செயலாளர் பேட்ரிக் ஷானன், அமெரிக்கா இனி ஆசியாவில் சீனாவின் போக்கை பொருட்படுத்தப்போவதில்லை என்றார்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை