சிரிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மூன்று படையினர் பலி

சிரிய இராணுவ நிலை மீது நாட்டின் தென் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டு மேலும் ஏழு வீரர்கள் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியா மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது. ஹெர்மொன் மலையில் சிரியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை பின்னேரம் வீசப்பட்ட இரு ரொக்கெட் குண்டுகளுக்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு ரொக்கெட் குண்டு இஸ்ரேலில் விழுந்திருப்பதோடு எந்தப் பாதிப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதிக்கு அருகில் இருக்கும் குனைத்ராவின் தென் பிராந்தியத்தில் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்ததாக பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி ஒருவர் சிரிய அரச ஊடக நிறுவனமான சானாவுக்கு குறிப்பிட்டுள்ளார். இதனால் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக அது குறிப்பிடுகிறது. இரு பீரங்கிகள், பல கண்காணிப்பகங்கள் மற்றும் உளவுத் தளங்கள் மற்றும் எஸ்.ஏ2 வான் பாதுகாப்புப் பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய துருப்புகளின் ஆயுதக் கிடங்கு ஒன்று மற்றும் லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக எதிர்த்தரப்பு போர் கண்காணிப்புக் குழுவான பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

லெபனானின் ஆயுத மற்றும் அரசியல் பிரிவுகளைக் கொண்ட குழுவான ஹிஸ்புல்லாஹ் ஈரானுடன் இணைந்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.

சியாவில் ஈரான் மற்றும் அதன் கூட்டணிகள் மீது இஸ்ரேல் கடந்த காலங்களில் பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

தனது போர் விமானம் ஒன்றின் மீது விமான எதிர்ப்பு ஏவுகணை வீசப்பட்டதாகக் கூறி சிரிய இராணுவ நிலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த வாரமும் தாக்குதல் நடத்தி இருந்தது. அந்தத் தாக்குதலில் தனது படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக சிரியா கூறியது.

சிரியாவில் தனது எதிரி நாடான ஈரான் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்கு இஸ்ரேல் தொடர்ந்த முயன்று வருகிறது.

370,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி அஸாத்துக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டு வருகிறது.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை