சவாலான அணிகளை வென்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்

தலைவர் திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக அடுத்தடுத்து போட்டிகள் கைவிடப்பட்டது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததாகத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இனிவரும் சவாலான போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை -- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் (11) நடைபெறவிருந்த உலகக் கிண்ணத் தொடரின் 16ஆவது லீக் போட்டி சீரற்ற காலநிலையால் நாணயச் சுழற்சியின்றியே கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கை அணி 4 லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியடைந்ததுடன், இரண்டு போட்டிகள் மழை காரணமாக தடைப்பட 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இது இவ்வாறிருக்க, மழையால் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டதால் இலங்கை அணி எஞ்சியுள்ள 5 லீக் போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை - -- பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன,

“உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அனைவரிடமும் இருக்கிறது. அதேபோல, இலங்கையில் இருந்தும், மைதானத்துக்கு வந்தும் இலங்கை ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதைப் பார்க்க ஆவலுடன் உள்ளனர். எனினும், காலநிலையால் ஏற்படுகின்ற இடையூறுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனாலும், ஒவ்வொரு போட்டிக்குமான ஆயத்தங்களை நாங்கள் தவறாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்தப் போட்டிக்குப் பிறகு நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுடன் விளையாடவுள்ளோம்.

அந்த அணிகளுக்கு சவால் கொடுப்பதற்கு நாங்கள் இன்னும் தயாராக வேண்டும். எனவே, எமக்கு கிடைக்கின்ற ஓரிரு நாட்களிலும் முடியுமான அளவு அந்த அணிகளை எதிர்கொள்வதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாங்கள் தொடர்ந்து பதினொரு நாட்கள் எந்தவொரு அணியுடனும் விளையாடவில்லை. எனவே, மிக விரைவில் எமது வீரர்கள் போட்டிக்குத் தயாராக வேண்டும். வலைப் பயிற்சிகளில் விளையாடுவது போல போட்டியின் போது விளையாட முடியாது. அப்போது எமக்கு வேறு விதமான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே, போட்டி நடைபெறுகின்ற மைதானத்தின் காலநிலைக்கும், ஆடுகளத்துக்கும் மிக விரைவில் எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெறுவதற்கு இனிவரும் போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திமுத் பதில் தருகையில்,

”அரையிறுதிக்குத் தகுதிபெற வேண்டுமாயின் இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெறாமல் அடுத்த கட்டத்துக்குச் செல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும். எமக்கு தற்போது நான்கு புள்ளிகள் உள்ளன.

புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கு இனிவரும் போட்டிகளில் 2 போட்டிகளிலாவது நாங்கள் வெற்றிபெற வேண்டும். அந்த சவால்தான் எமக்கு முன்னால் உள்ளது.

நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு தான் விளையாடுவோம். எனவே, எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளில் இரண்டில் எப்படியாவது வெற்றி பெறுவதற்கு முயற்சிப்போம்” எனக் கூறினார்.

நுவன் பிரதீப்பின் உபாதை மற்றும் லசித் மாலிங்க உடனடியாக நாடு திரும்புவது குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

”வைத்தியர்களின்அறிவுறுத்தலுக்கு அமைய நுவன் பிரதீப்புக்கு ஒரு வாரகாலம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு முன்னர் அவர் குணமடையலாம்.

ஆனால் அந்தப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை உறுதியாக கூறமுடியாது.

ஏனெனில் அவர் இதுவரை பந்துவீசவோ அல்லது களத்தடுப்பில் ஈடுபடவோ இல்லை. எனவே, போட்டிக்கு முன் அவருடைய காயத்தின் தன்மையை கருத்திற்கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை