பாகிஸ்தானை 41ஓட்டங்களால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி ஈட்டி 6 புள்ளிகளை பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றது.308 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்று தோல்வி தழுவியது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இமாமுல் ஹக் 53 ஓட்டங்களையும் பார்கர் ஸமான் ஓட்டம் எதுவும் பெறாமலும் பாபர் அஸாம் 30 ஓட்டங்களுடனும் முகம்மது ஹபீஸ் 46 ஓட்டங்களுடனும் அணியின் தலைவர் சர்பிராஸ் அஹமட் 40 ஓட்டங்களுடனும் ஹசன் அலி 32 ஓட்டங்களுடனும் வஹாப் றியாஸ் 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 8 ம் இடத்துக்கு சென்றது.

பந்து வீச்சில் ஆஸி அணிசார்பாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டையும் ஸ்டார்க்,றிச்சட்சன் தலா இரு விக்கெட்டையும். கொல்டர் நைல்,பின்ஞ் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி.

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாக் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 9.5 ஓவரில் அவுஸ்திரேலியா 50 ஓட்டங்களைத் தொட்டது. அதன்பின் ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

பிஞ்ச் 63 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வோர்னர் 51 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 22.1 ஓவரில் 146 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது, பிஞ்ச் 84 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ஓட்டங்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய டேவிட் வோர்னர் 107 ஓட்டங்கள் குவித்தார்.

அதன்பின் வந்த ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷோன் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கொல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா 49 ஓவரில் 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்,சஹீன் ஷா அப்ரிடி இரண்டு விக்கெட்டுக்களையும் ,வஹாப் றியாஸ்,ஹசன் அலி மற்றும் ஹபீஸ் தலா ஒரு விக்கெட்டை பதம் பார்தனர்.

அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.இந்த உலக கிண்ணத்தில் பெறப்பட்ட இரண்டாவது 5 விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணி இந்த உலக கிண்ணத்தில் முதலாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட 146 ஓட்டங்கள் இணைப்பாட்டமானது எந்தவொருக்கெட்டுக்காகப் பெற்ற அதிகூடிய ஓட்டமாகும்.

பாக் வீரர் அமிரின் 4/28 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பிரதியாக இருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார்.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை