‘ஜிங் பெய்ல்ஸ்’ சர்ச்சை: இது போட்டியின் ஒரு பகுதி - ஐசிசி

ஜிங் பெய்ல்ஸ்’ குறித்து முன்னணி வீரர்கள் குறை கூறிய போதிலும், போட்டியின் பாதியில் ஏதும் செய்ய இயலாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் காலத்திற்கு ஏற்ப நவீன மாற்றங்களை ஐசிசி செய்து வருகிறது. இதனடிப்படையில்தான் ‘ஜிங் பெய்ல்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டது.

பந்து ஸ்டம்பை தாக்கியதும் ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலிக்கும். அதேபோல் ஸ்டம்பும் பிளிங்க் ஆகும்.

ஆனால், சில நேரங்களில் ஸ்டம்பை பந்து தாக்கும்போது ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலித்தாலும் ஸ்டம்பில் இருந்து பெய்ல்ஸ் கீழே விழுவதில்லை. இதனால் துடுப்பாட்டவீரர் ஆட்டமிழப்பில் இருந்து தப்பி விடுகிறார். ஆகவே சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணத்தில் இதுபோன்று ஐந்து முறைக்கு மேல் நடந்துள்ளது. இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான போட்டியில் கூட இதுபோன்று நடந்துள்ளது. வோர்னர் 1 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தை எதிர்கொண்டார். அப்போது வோர்னர் தடுத்தாடிய பந்து பின்னால் சென்று லெக் ஸ்டம்பை பலமாக தாக்கியது. ஆனால் ‘ஜிங் பெய்ல்ஸ்’ ஜொலிக்கவும் இல்லை. ஸ்டம்பும் பிளிங்க் ஆகவில்லை. இதனால், இந்திய அணி தலைவர் விராட் கோலி, துணைத் தலைவர் ரோகித் சர்மா ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து இந்திய அணி தலைவர் விராட் கோலி, அவுஸ்திரேலியா அணி தலைவர் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து முன்னாள் தலைவர் வோகன் போன்றோர் கேள்வி எழுப்பினர்.

இதனால் ‘ஜிங் பெய்ல்ஸ்’ மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், போட்டியின் பாதியில் மாற்றம் செய்தால் அது போட்டிக்கான கண்ணியத்தை விட்டுக்கொடுத்தது போன்றதாகிவிடும். அனைத்து போட்டிக்கும் ‘ஜிங் பெய்ல்ஸ்’தான் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி கூறுகையில் ‘‘நாங்கள் போட்டியின் மத்தியில் எதையும் மாற்றமாட்டோம். அப்படி செய்தால் தொடரின் கண்ணியத்தை விட்டுக்கொடுத்ததாகி விடும். 10 அணிகள் விளையாடும் 48 போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்டம்புகள் மாற்றப்படவில்லை. 2015 ஆண்டு உலகக் கிண்ணத்தில் இருந்து ஐசிசி நடத்தும் தொடர்களில் இவைகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1000 போட்டிகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை போட்டியின் ஒரு பகுதி’’ என்று தெரிவித்துள்ளது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை