தேசிய போதை ஒழிப்பு வாரம் இன்று மூன்றாம் நாள் நிகழ்வு; ஜனாதிபதி பிரதம அதிதி

தேசிய போதை ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (26) விசேட நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் நடைபெறுகிறது.

போதைப் பொருள் ஒழிப்பு வாரத்துக்கு இணைந்ததாக முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதை ஒழிப்பு தொடர்பான அறிவூட்டும் நடை பவனி வெல்லம்பிட்டிய ஒபேசேகர, கொத்தட்டுவ, பண்டாரநாயக்கபுர மற்றும் முல்லேரியா போன்ற இடங்களில் ஆரம்பமாகி கொலன்னாவை ரஜமஹா விஹாரையைச் சென்றடையவுள்ளன. இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் மற்றும் அபாயகர ஔடத கட்டுப் பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் சமன் அபேசிங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் செயல்படுத்தப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை மேலும் பலப்படுத்த ஜூன் 23ம் திகதியிலிருந்து ஜுலை 1ம் திகதி வரையான வாரம் தேசிய போதை ஒழிப்பு வாரமாக வும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது நாளான நேற்று (25) சமூக அமைப்புகளை முன்னிலைப்படுத்தி விசேட நிகழ்ச்சிகள் நாடுபூராவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. அதில் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய பங்களிப்புக்களைச் செய்தனர்.

பிரதான நிகழ்ச்சி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றதுடன் போதைப் பொருள் பாவனை தொடர்பான மாநாடு, கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வாகன பவனி மூலம் வருகை தந்தவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மாவட்ட செயலாளர் பலரும் இதில் கலந்துகொண்டனர். ‘நான் போதைப் பொருளை நிராகரிக்கின்றேன்’ என்றும் தொனிப்பொருளின் கீழ் பாரிய வாகன ஊர்வலமொன்றும் நடைபெற்றது.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை