கல்முனையில் நேற்று பெரும் பதற்றம்

ஏட்டிக்குப் போட்டியான போராட்டம்; இராணுவம், கடற்படை, பொலிஸ் குவிப்பு

பிரதமரின் செய்தியோடு சென்ற அமைச்சர்கள் தயா கமகே, மனோ,  எம்.பிக்கள் சுமந்திரன், கோடீஸ்வரனுக்கு எதிராக கோஷம்; பதற்றம்

கட்சித் தலைமைக்கு செவ்வாய் வரை கோடீஸ்வரன் காலக்கெடு

காரைதீவு குறூப் நிருபர் வி.ரி.சகாதேவராஜா

கல்முனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (21) ஐந்தாவது நாளாகவும் நீடித்ததுடன், இந்தப் போராட்டத்திற்குப் போட்டியாக முஸ்லிம் மக்கள் முன்னெடுக்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்த ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களால் கல்முனை நேற்று பதற்றமும் பீதியும் நிறைந்து காணப்பட்டது. படையினரும் பொலிஸாரும் நகரில் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய செய்தியுடன் அவரின் முக்கிய பிரதிநிதிகள் உண்ணாவிரத மேடைக்கருகில் சென்றதால், அங்கு கலவர நிலை ஏற்பட்டது. அதனையடுத்து பாதுகாப்புப் பிரிவினர் அவர்களைக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேற்றிக்கொண்டு சென்றனர்.

அமைச்சர்கள் மனோ கணேசன், தயா கமகே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் மூன்று

மணியளவில், உண்ணாவிரதிகளைச் சந்தித்துப் பிரதமரின் உறுதிமொழியைத் தெரிவிப்பதற்காக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையை வாசிக்க முற்பட்டனர். அப்போது அங்குக் குழுமியிருந்த மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை முழுமையாக தரமுயர்த்தி செயற்பட வைக்க 3 மாதகால அவகாசம் தேவையென உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு வெளியிட்ட ஊடகக்குறிப்பை அமைச்சர் மனோ கணேசன் வாசிக்கும் போது உண்ணாவிரதிகளும் பொதுமக்களும் கூக்குரலிட்டு அதனை ஏற்க மறுத்தனர். சுமார் 20 நிமிடங்கள் அங்கு கூடியிருந்தவர்களின் கூக்குரல் நீடித்தது.

அதன்போது அமைச்சர் தயா கமகே அவ்விடத்திற்கு வந்து நிலை மையை விளக்க முற்பட்டபோது, மீண்டும் கூக்குரலால் உண்ணாவிரத வளாகம் அதிர்ந்தது. மூன்று மாத கால அவகாசத்தை ஏற்க முடியாது! தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று மக்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அனைவரும் வெறுங்கையுடன் அங்கிருந்து வெளியேறினர்.

பிரதமரைக்காப்பாற்ற நீதிமன்றம் சென்ற சுமந்திரன் எம்.பி., சொந்த தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இதுவரை நீதிமன்றம் செல்லாதது ஏன்? அங்கு கூடியிருந்தவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். அதுவரை பொறுமையாக இருந்த உண்ணாவிரதிகளான நகர சபை உறுப்பினர் ராஜனும், ரண்முத்துகல தேரரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாகப் பெரும் சிரமத்திற்கு மத்தியிலும் அழுகையுடன் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.

அமைச்சர்களின் இந்தக்காலஅவகாசம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உடனடியாக தீர்வு வேண்டும். நாம் தீக்குளிப்போம்; நாளை நஞ்சருந்துவோம் என்று வண.ரண்முத்துகல தேரரும் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் அழுதுபுலம்பத் தொடங்கிவிட்டனர். அதைப்பார்த்த மக்களும் அழத்தொடங்கினர்.

அப்போது, தேரர் தன்னில் சேலைனுக்காக கட்டியிருந்த ஊசி வயர் என்பவற்றை கழற்றிவீச இரத்தம் பீறீட்டுப்பாய்ந்தது. சூழல் உணர்ச்சிவசமாகியது. இளைஞர்கள் விரைந்து செயற்பட்டார்கள்.கல்முனை ஆதார வைத்தியசாலைக்குத் தகவல் பறந்தது. சற்று நேரத்தில் அம்பியூலன்சில் வைத்தியர் குழு வந்தது. தேரர் உள்ளிட்ட உண்ணாவிரதிகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சேலைன் ஏற்றப்பட்டது. இதனிடையே, கோடீஸ்வரன் எம்.பியிடமும் மக்கள் பலவாறு கேள்வியெழுப்பினர்.

இன்னமும் த.தே.கூட்டமைப்போடு இருப்பதனால், இனிமேல் இங்கு வரவேண்டாம். நீங்களும் உண்ணாவிரதம் இருங்கள் என்று கோஷமிட்டனர். இந்தவேளையில், மட்டு. விகாராதிபதி வண.அம்பிட்டிய சுமனதேரர் உரையாற்றத் தொடங்கிய போது மக்கள் அமைதியானார்கள்.

"எமது உண்ணாவிரதம் தொடரும். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தோல்வி நமக்கில்லை. நாளை (இன்று) 10 மணிக்கிடையில் இப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவேன். கல்முனைத் தமிழ் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்தில் நிலவும் தமிழர் பிரச்சினைகளும் விரைவில் தீரும். அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தராவிட்டால் முழு கிழக்கு மாகாணமும் கொதித்தெழும்" என்றார்.

இறுதியில் கோடீஸ்வரன் எம்.பி உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றினார்.

"என்னைத் தெரிவு செய்த தமிழ் மக்களின் ஆசை அபிலாசைகளோடு தான் என்றும் நான் நிற்பேன். அதற்காகக் கட்சி தலைமைகள் என்பவற்றைப் பார்க்காமல் மக்களுக்காக போராடுவேன். எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கிடையில் கணக்காளரை இங்கு நியமிக்கவேண்டும். இன்றேல், நான் எனது கட்சியோடு இருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும்.

இந்த மேடையை அரசியல் களமாக மாற்றக்கூடாதென்பதற்காக கடந்த 4 நாட்களாக நான் ஒன்றுமே பேசவில்லை.

இந்தப் பிரதேச செயலகம் முழுமையாகத் தரமுயர்த்தப்படவேண்டும் என்பதில் நான் 100 வீதம் செயற்படுவேன். ஓரிரு கிழமைக்குள் காணி அதிகாரம் கிடைக்காவிடின் நான் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும் என்றார்.

உண்ணாவிரதி ராஜன் கூறுகையில்,

எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கிடையில் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல், கோடீஸ்வரன் எம்.பி. கூட்டமைப்பு என்று கூறிக்கொண்டுவரக்கூடாது என்றார். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், கூட்டமைப்பு எம்.பீக்கள் அனைவரும் பதவி துறக்க வேண்டுமென கூடியிருந்தோர் கோரிக்ைக விடுத்தனர்.

காரைதீவு குறூப் நிருபர்

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டதைப் போல, கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என, அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கல்முனை உண்ணாவிரதிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் தெரிவித்ததாவது: இனரீதியாக நிலத் தொடர்பற்ற பல பிரதேச செயலகங்கள், பல கல்வி வலயங்கள் உள்ளன. எனினும் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது மட்டும் இவை தடுக்கப்படுகின்றன.சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் இச்செயற்பாடுகள் நல்லதல்ல.

இப்போராட்டத்திற்கு இனவாதசாயம் பூசக்கூடாது. அமைச்சர் தயாகமகே உரையாற்றுகையில்: இந்த நீண்டகால பிரச்சினையை நான் நன்கறிவேன். அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகங்கள் உள்ளன. சில கலப்பாகவும் சில தனியாகவும் உள்ளன. அந்தவகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைவதில் யாருக்கும் பாதிப்பில்லை.

தமிழருக்கு பிரதேச செயலகம் அமைப்பதில் முஸ்லிம்களுக்கோ முஸ்லிம்களுக்கு பிரதேச செயலகம் அமைப்பதில் தமிழருக்கோ எவ்வித பாதிப்புமில்லை.

இன்னும் 3மாதத்துள் இப்பிரச்சினை முற்றாக தீர்ந்துவிடும். இந்த வாக்குறுதி எழுத்துமூலம் தரப்பட்டுள்ளது என்றார்முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேசுகையில்: நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்கள் போன்றே கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் உள்ளது. இது ஒரு முழுமையான பிரதேச செயலகம்தான். இங்கு கட்டடம் உள்ளது.300க்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். பிரதேச செயலாளர் இருக்கிறார்.

எனவே அதனைத்தரமுயர்த்தவேண்டிய அவசியமில்லை. இதற்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப் படவில்லையென்பதே உண்மை. அவற்றை வழங்க சகோதர முஸ்லிம்கள் தடையாகவுள்ளனர். எனவே அதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பதே இன்றைய தேவை.

2018இல் மீண்டும் ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாம் 10 அம்சக் கோரிக்கையை முன்வைத்தோம். அதில் முதலாவது கோரிக்கை கல்முனை வடக்கு பிரதேச செயலகக் கோரிக்கையே.நாம் ஜனவரியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். இதற்கான தேசிய குழு ஏப்ரலில் நியமிக்கப்பட்டது. ஈஸ்டர் தினத் தாக்குதலால் இப்பணி தாமதமடைந்துள்ளது. எனவே ஜூன் 30க்குள் இதைச் செய்து தருவதாகக்கூறியுள்ளனர்.

தற்போது 3மாதத்திற்குள் பூர்த்தி செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றார். இதன்போது மக்கள் கூச்சலிடத் தொடங்கினர்.

இதனால் வேறுவழியின்றி அமைச்சர்களுடன் பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரனும் வெளியேற நேரிட்டது. (வி)


முஸ்லிம்கள் நேற்றும் சத்தியாக்கிரகம்

 

பிரதமரின் செய்தியுடன் வந்த  அமைச்சர் தயா கமகே,  முஸ்லிம்களுக்கு விளக்கம்

பெரியநீலாவணை விசேட நிருபர் சினாஸ்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்ேகாருவது நியாயமற்றதெனத்தெரிவித்து முஸ்லிம்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தரப்பினரின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கல்முனை பழைய பஸ் நிலையத்தில் முஸ்லிம் தரப்பினர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதி யில் கல்முனையில் உரு வாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கடந்த இரு தினங்களாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதில் நேற்றைய தினம் (21) முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்,கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ,எம்.ஜாஹிர், உட்பட பொத்துவில், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் பங்கு பற்றி வருகின்றனர்.

கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கடந்த வியாழன் முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்களை சந்தித்த அமைச்சர் தயாகமகே முஸ்லிம் மக்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் தற்போது பிரதமர் ஊடாக எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார். இங்கு உரையாற்றிய அமைச்சர்,

தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கை தொடர்பிலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சமரசமாக பேசினார்.

 

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை