சந்தேக நபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுத்தங்கள் கொடுக்கவில்லை

பயங்கரவாதம் முடிந்துவிட்டதென்ற வார்த்​ைதயை எம்மால் கூற முடியாது

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எவ்வித அழுத்தங்களையும் தனக்கு கொடுக்கவில்லையென இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ய நியதிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவத் தளபதி என்ற வகையில் இராணுவத்தினருக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள்,

விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

ஏப்ரல் 26ஆம் திகதி இசான் அஹமட் என்பவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலக்கத்தை சகலரும் அறிவார்கள். அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார்.

இதன்போது அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைதுசெய்தீர்களா? எனக் கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது. நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன். பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் இந் நபர் கைது செய்யப்பட்டுள்ளரா? எனக் கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. என்றாலும் சந்தேகநபரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாதத் தாக்குதலையும்விட மாறுபட்ட ஒன்றாகும். இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். முப்படை மாற்றம் பொலிஸ் இணைந்து பயங்கரவதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இந்தப் பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி வழங்கிய சாட்சியத்தின் முழு விபரம் 12 ஆம் பக்கம் பார்க்கவும்.

ஷம்ஸ் பாஹிம்,

சுப்ரமணியம் நிசாந்தன்

 

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை