நாட்டுக்கு சாபக்கேடு

அடுத்த தேர்தலுக்கு முன்னரோ, பின்னரோ நீக்கியாக வேண்டும்

இரண்டு தலைவர்களை உருவாக்கி நாட்டைச் சீரழித்த சட்டத் திருத்தம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாட்டுக்குப் பெரும் சாபக்கேடு என்பதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னராகவோ அந்தச் சட்டத்தை இரத்துச் செய்துவிடவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடு முன்னேற்றமடைந்து சுபீட்சம் ஏற்பட வேண்டுமானால், இந்தப் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதே முதற்கட்டப் பணியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை (26) நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

தாம் பதவிக்கு வந்தால், 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கப்போவதாக எதிர்க்கட்சியினர் கூறுவதாகவும் ஆனால், தம்மைப்பொறுத்தவரை அந்த இரண்டு (18,19) திருத்தச் சட்டங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று தாம் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"18ஆவது திருத்தம் என்பது மன்னராட்சி. அதனை 2015இல் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் இந்தப் 19ஆவது திருத்தச் சட்டம் முடக்கி வைத்திருக்கிறது. இதனால், நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியிருக்கிறது" என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தத் திருத்தச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அரசியல் நிபுணர்களா அல்லது முட்டாள்களா? என்ற கேள்வி இன்று எழுந்திருப்பதாகக் கூறினார்.

"19ஆவது திருத்தச் சட்டத்திற்கு 215பேர் வாக்களித்திருக்கிறார்கள். எனக்கு வாக்கு இருக்கவில்லை. என்றாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு அர்ப்பணித்தேன். பாராளுமன்றத்தில் பெரும் குழப்பத்திற்கு

மத்தியிலேயே அனைவரும் வாக்களித்து நிறைவேற்றினோம். எல்லாச் சிக்கலையும் விஜேதாச ராஜபக்‌ஷ சமாளித்து வாக்கெடுப்புக்கு வழிவகை செய்தார். 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஓர் அமைச்சராகவிருந்து வாக்களித்தேன். 19ஆவது திருத்தச்சட்த்திற்குத் துணைபோயிருக்கின்றேன்.

ஆனால், நாம் எதிர்பார்த்த எதுவும் அந்தச் சட்டத்திருத்தத்தில் ஏற்படவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே திருத்த முடியும் என்று உச்ச நிதிமன்றம் வியாக்கியானம் கூறியது. அத்துடன் பல விடயங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

எனினும், உச்ச நீதிமன்றத்தையும் துச்சமென நினைத்துச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதன் பாதகத் தன்மை இப்போதே புரிகிறது. சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் எந்தவோர் ஒழுங்கு விதியும் சரியாக வரையறுத்துச் சொல்லப்படவில்லை. அதனால், அரச துறையிலும் குழப்பம்" என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரண்டு தலைவர்களை

உருவாக்கிய 19 திருத்தம்

19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள 'ஒரு வாகனத்தை இரண்டு சாரதிகள் செலுத்த முடியாது' என்ற கூற்றுக்கும் விளக்கமளித்தார்.

"ஒரு சாரதிக்கு மாத்திரமே 62,50,000 பேர் வாக்களித்து அனுமதிப்பத்திரம் வழங்கினார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் அனுமதிப்பத்திரம் எடுத்த மற்றொரு சாரதி, முன்னிருக்ைகயில் அமர்ந்துகொண்டு வாகனத்தின் பயணத்தையும் போக்ைகயும் குழப்புகிறார். கியர் மாற்றுகிறார்; விபத்தை ஏற்படுத்துகிறார். ஆகவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் வந்தாலும் சரி, அல்லது ரணில் விக்கிரமசிங்க வந்தாலும் சரி, நிச்சயம் இந்த நாட்டில் ஸ்திரமற்ற நிலையே உருவாகும். ஜனாதிபதி செயலகத்தில் ஓர் அரசாங்கமும் அலரிமாளிகையில் ஓர் அரசாங்கமும் இருக்க முடியாது.

ஆகவே, முதலாவது வேலையாக 19 ஐ இல்லாதொழிக்க வேண்டும்" என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தத் திருத்தச் சட்டம் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காக முட்டாள்கள் உருவாக்கியதாகும்! இது நாட்டுக்கு சாபக்ேகடு! இதனை ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்டோர் சேர்ந்து ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான் 2020ஆம் ஆண்டு சுபீட்சம் நிறைந்த நாடாகும்; இல்லாவிட்டால், மேலும் சீரழிந்த நிலைக்குத் தள்ளப்படும் என்று எச்சரித்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதில் அளித்தார்.

நான்காண்டுக்குப் பின்னர்

இதனைச் சொல்கிறீர்களே?

"இதனுடைய பாரதூரம் இப்போதுதான் புரிகிறது. 19 தவறு என்பது என் கருத்து. யாருக்கும் தவறு நேரலாம். திருத்திக்ெகாள்ளத்தானே வேண்டும். இஃது உச்ச நீதிமன்றத்தையும் புறந்தள்ளி செய்யப்பட்ட ஒரு திருத்தம். அச்சிட கொண்டுசென்றபோதுகூடச் சில பதங்களை மாற்றியிருக்கிறார்கள் என்றும் அறிந்துகொண்டுள்ளேன். இது முற்றிலும் ஓர் அரசியல் ஊழல்.

விஜேதாச ராஜபக்‌ஷ தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டுகிறீர்களே, அவர் உங்களோடுதானே பணியாற்றினார்?

"அவர் தயாரித்ததாக நான் சொல்லவில்லை. ஜயம்பத்தி விக்கிரமரட்ண, சுமந்திரன் போன்றோர்தான் தயாரித்தார்கள். பாராளுமன்றத்தில் எழுந்த நெருக்குவாரத்தைச் சமாளித்துக்ெகாடுத்தவர் விஜேதாச" என்றார் ஜனாதிபதி.

விசு கருணாநிதி

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை