கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம்

சுபத்ரா ராமய விகாராதிபதி, மாநகர சபை உறுப்பினர்கள், இந்து, கிறிஸ்தவ மத குருமார்கள் களத்தில் குதிப்பு!

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி கல்முனையில் நேற்று முதல் (17) சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி

வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்தினம் ஆகியோர் முதற்கட்டமாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். மேலும் பலர் இதில் இணைந்துவருகின்றனர்.

தற்போது கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எனும் பெயரில் சகல கடிதத் தொடர்புகளையும் மேற்கொண்டு வருகின்றது. பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக ரி.ஜெ.அதிசயராஜ் கடமையாற்றி வருகின்றார். எனினும், குறித்த பிரதேச செயலகத்தின் நிதி தொடர்பான விடயங்கள் மற்றும் காணி அதிகாரம் என்பன கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால் பல்வேறு அசௌகரயங்களை எதிர்நோக்கி வருவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் ஒருவரை நியமிக்க வேண்டும், பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் தமிழ்ப்பிரதேச செயலகம் என்பதை இனரீதியாக பிரிக்காமல் தனியான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எனப் பிரித்து தனிப்பிரதேச செயலகமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1992ஆம் ஆண்டு 58ஆம் இலக்க அதிகாரப்பரவலாக்கச் சட்டத்தின் மூலம் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில் சிவில் நிருவாகத்தில் பல படித்தரங்களை கடந்து வந்த 'கல்முனை' ஒரு பிரதேச செயலகமாக மாற்றம் பெற்றது.

1989 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச நிருவாகத்தின் கீழ் இருந்து வந்த 75 கிராம சேவகர் பிரிவுகளுள் தமிழ் மக்கள் செறிந்துவாழும் 29 கிராம சேவகப் பிரிவுகளை ஒன்றிணைத்து கல்முனை (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகம் வர்த்தமானி அறிவித்தல் இல்லாமல் தற்காலிகமாகத் தனியாக பிரிக்கப்பட்டது. ஏனைய 46 கிராம சேவகப் பிரிவுகளும் கல்முனை பிரதேச செயலகத்தின் நிருவாகத்திற்குள்ளேயே காணப்பட்டன. முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் கலந்து வாழும் இப்பிரதேசத்தில் இந்தப் பிரிப்பின் முலம் எவ்வித பிளவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இதன் பின்னர் கல்முனை பிரதேச செயலக நிருவாகத்திற்கு உட்பட்டதாக இருந்த சாய்ந்தமருது பிரதேச செயலகம் 1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக 1999.12.19 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தின் உப அலுவலகமாக பிரகடனப்படுத்தப்பட்டு பின்னர் 2001.02.04 ம் திகதி பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் றிச்சட் பத்திரனவினால் சாய்ந்தமருது தனியான பிரதேச செயலகமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகம் தற்போது 29 கிராம சேவகர் பிரிவுகளில் 49,682 சனத்தொகையை உள்ளடக்கியதாக இயங்கி வருகின்றது. இவ்வாறு கல்முனை நகரத்தின் சிவில் நிருவாக சேவை கல்முனை பிரதேச செயலகம், கல்முனை (தமிழ்ப் பிரிவு), சாய்ந்தமருது என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

1989.04.12ல் கல்முனை(தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகம் அமைக்கப்பட்டு உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி 29 கிராம சேவகர் பிரிவுகளை கெண்டதாக கல்முனை(தமிழ்ப் பிரிவு) காணப்படுகின்றது. இதன் மொத்த சனத்தொகை 35,526 ஆகும்.இந்தப் பிரதேச செயலகத்தை தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தித்தர வேண்டும் என்பது உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கையாகும்.

இந்த உண்ணாவிரதத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும், மதத் தலைவர்களும், சிவில் சமூகத்தினரும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப்,பெரியநீலாவணை விசேட, பாண்டிருப்பு தினகரன் நிருபர்கள்

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை