தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற பொசன் விழா

கல்முனை மாநகர சபையின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்திருந்த இன ஐக்கியத்திற்கான பொஷன் விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த முதலிகே, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை பௌத்த விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா ஆகியோருடன் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பல்லின சமூகப் பெரியார்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருத்தனர்.

கல்முனை வர்த்தகர் சங்கத்தின் ஆலோசகர் ரிஷாத் ஷரீப் நன்றியுரை நிகழ்த்தினார், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தனர். கல்முனையில் வரலாற்றில் முதற் தடவையாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பொசன் விழாவை முன்னிட்டு கல்முனை மாநகரம் முழுவதும் பௌத்த கொடிகள், பொசன் கூடுகள், சோடனைகள் மற்றும் பல வர்ண மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை வர்த்தகர்களும் பணியாளர்களும் இவ்விழாவில் பங்குபற்றும் பொருட்டு அனைத்து வர்த்தக நிலையங்களும் அன்றைய தினம் மாலை 5.00 மணியுடன் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பெரிய நீலாவணை விசேட, கல்முனை விசேட நிருபர்கள்)

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை