தமிழ்த் தலைமைகளின் தவறுகளுக்கு தமிழ் மக்கள் தண்டிக்கப்படக் கூடாது

தமிழ் தலைமைகள் விட்ட தவறுகளுக்காக சாதாரண தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு. தமிழ் பேசும் மக்களின் பெயரால் சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகளின் பிரச்சினைகள் வேறு. அரசியல் தீர்வின்றி அவலப்படும் மக்களுக்கு விரைவில் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

பயங்கரவாத தடுப்புச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இனவாதமோ, மதவாதமோ அது எந்த உருவில் வந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்பவர்கள். அதில் தமிழ் இனவாதம், சிங்கள இனவாதம், முஸ்லிம் இனவாதம் என்றோ, இந்து மத வாதம், பௌத்த மத வாதம், இஸ்லாமிய மத வாதம் என்றோ பாகுபாடு எமக்கு கிடையாது. இனவாதத்தையோ, மதவாதத்தையோ மூலதனமாக்கி அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலையில் எமது கட்சி இல்லை என்பதை நான் மீண்டும் இந்தச் சபையிலே வலியுறுத்திக் கூறுகின்றேன். 

முஸ்லிம் கடைகளைத் தவிர்க்க வேண்டும் என சிலர் ஊடகங்களில் பகிரங்கமாகவே கூறுகின்றனர். பதிலுக்கு முஸ்லிம் மக்களும் சிங்களக் கடைகளைத் தவிர்க்குமாறு ஊடகங்களில் கூறப் போனால், இந்த நாட்டின் எதிர்கால நிலை என்னவாகும்? என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கௌதம புத்தர் அவர்களது சிலைகளை சேதப்படுத்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கச் செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அது, பௌத்த மதத்தினரை உணர்வு ரீதியாகப் புண்படுத்துகின்ற செயலுமாகும். அதே போன்று ஏனைய மதத்தவர்களது மத வழிபாட்டுத் தலங்களை, மத அடையாளங்களை அழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயமாகும். அது ஏனைய அந்தந்த மதத்தவரையும் உணர்வு ரீதியாக புண்படுத்தவே செய்கின்றது. கௌதம புத்தர் அவர்களை வழிபடுகின்ற மக்களே இல்லாத இடங்களில், பிற மதத்தவர்கள் வாழுகின்ற நிலையில், அங்கே கௌதம புத்தர் அவர்களது சிலைகளை வைப்பதும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களது உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயலாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல் ஏனைய மதத்தவர்களும் தமது மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமான செயற்பாடாகும்.

மகேஸ்வரன் பிரசாத் 

Sun, 06/23/2019 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை