கோப்பா அமெரிக்க கிண்ண காலிறுதிக்கு பிரேசில், வெனிசுவேல அணிகள் தகுதி

பெரு அணிக்கு எதிராக 5–0 என கோல் மழை பொழிந்த பிரேசில் அணி மற்றும் 3–1 என்ற கோல் வித்தியாசத்தில் பொலிவிய அணியை தோற்கடித்த வெனிசுவேலா அணிகள் கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்று முன்னேற்றம் கண்டன.

தனது சொந்த மண்ணில் நடைபெறும் கோப்பா அமெரிக்க தொடரில் பெரு அணிக்கு எதிராக முதல் பாதியிலேயே 3 அபார கோல்களை புகுத்திய பிரேசில் போட்டி முடிவில் எதிரணியை துவம்சம் செய்தது.

கோல் வாயிலில் ஏற்பட்ட இழுபறியில் எதிரணி கோல்காப்பளர் தடுமாற்றம் அடைய 12 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி கசிமிரோ பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து ஏழு நிமிடங்கள் கழித்து லிவர்பூல் வீரரான ரொபர்டோ பெர்மினோ எதிரணி கோல்காப்பாளர் பந்தை பறிமாற்றுவதற்காக உதைத்தபோதும் அதனைப் பெற்று கோலாக மாற்றினார்.

இத்தோடு நிற்காத பிரேசில் 32 ஆவது நிமிடத்தில் எவர்டன் சோரஸ் தாழ்வாக உதைத்த பந்து கோல்காப்பாளரை தாண்டி வலைக்குள் சென்றதோடு தொடர்ந்து 2ஆவது பாதியின் எட்டாவது நிமிடத்தில் வைத்து டானியல் அல்வேஸ் பிரேசிலை 4-0 என முன்னிலை பெறச் செய்தார்.

போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் மாற்று வீரரான வில்லியன் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து உதைத்து அபார கோல் ஒன்றை பெற்றதன் மூலம் பிரேசில் அணி உறுதியான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தி தனது காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

இதனிடையே டார்வின் மச்சிஸின் இரட்டை கோல்களின் உதவியோடு பொலிவியாவை வீழ்த்திய வெனிசுவேலாவால் ஏ குழுவில் இருந்து பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேற முடிந்தது.

பெரு மற்றும் பிரேசில் அணிகளுக்கு எதிரான தனது முதல் இரு போட்டிகளையும் கோலின்றி சமநிலை செய்த வெனிசுவேலா இந்தப் போட்டியில் வென்றால் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையிலேயே களமிறங்கியது.

போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே மச்சிஸ் தலையால் முட்டி கோல் பெற்றார். தொடர்ந்து அவர் 55 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று வெனிசுவேலாவை 2–0 என முன்னிலை பெறச் செய்தார்.

எனினும் லியோனல் ஜஸ்டினோ மூலம் 83 ஆவது நிமிடத்தில் பொலிவியா கோல் ஒன்றை பெற்று சிறு நம்பிக்கை தந்தபோதும் இதுவரை கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றிராத வினிசுவேலா மூன்று நிமிடங்கள் கழித்து ஜோசப் மார்டினஸ் மூலம் 3 ஆவது கோலை புகுத்தியது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை