ஈரான் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா ‘சைபர் தாக்குதல்’

ஈரானிய ஆயுத அமைப்புகள் மீது கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா சைபர் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதோடு ஈரான் மீது வான் தாக்குதல் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு வாபஸ் பெற்றிருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஈரானிய ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணனி அமைப்புகள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீதான தாக்குதல் அதேபோன்று எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாகவே சைபர் தாக்குதல் இடபெற்றிருப்பதாக நியூயோர்க் டைப்ஸ் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஈரானின் ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டுக் கணனிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்காக வாரக்கணக்கில் திட்டமிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் ஈரான் அதனை மறுத்து வருகிறது.

ஈரானிய கணனி அமைப்புகள் சேதமாக்கப்பட்டது குறித்து சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மேலும் தடைகளை விதிக்கவிருப்பதோடு அதனை ஒரு பெரும் தடைகள் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதில் இருந்து தடுப்பதற்கு இந்தத் தடைகள் தேவையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது வழியை மாற்றும் வரை பொருளாதார அழுத்தம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானுடனான 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது தொடக்கம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. அது தொடக்கம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

அணுத்திட்டம் குறித்த சர்வதேச உடன்படிக்கையின் கட்டுப்பாடுகளை மீறுவது குறித்த அறிவிப்பை ஈரான் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

எனினும் ஈரானுடனான யுத்தம் ஒன்றுக்கு விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் டிரம்ப், மோதல் ஒன்று ஏற்பட்டால் ஈரான் துடைத்தழிக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதனிடையே தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றச்சாட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்னர் உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலையில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டிருந்த போது தனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்ததாக அந்த செய்தி விபரிக்கிறது. ஆனால், இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

மறுபுறம் ஈரானிய கணனி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா பல வாரங்களாக திட்டமிட்்டிருந்ததாகவும் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து அதற்கு பதிலடியாக அந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் பல ஊடகங்கள் அமெரிக்க அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சைபர் தாக்குதலால் ஈரானிய கணனி அமைப்புகள் செயலிழந்ததாக வொஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏ.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளன. அந்த தாக்குதலால் அந்த கணனி அமைப்பு குறிப்பிட்ட நேரம் செயலிழந்து விட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை