விசாரணை கோரிய ஐ.நா மீது எகிப்து அரசாங்கம் கடும் சாடல்

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதி முஹம்மது முர்சியின் மரணத்தை அரசியலாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையை எகிப்து அரசு கடுமையாக சாடியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து முர்சி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

எனினும் அவர் இயற்கை மரணமெய்தியதாக குறிப்பிட்டிருக்கும் எகிப்து வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அஹமது ஹாபிஸ், ஐ.நாவின் வலியுறுத்தலை கண்டித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் முர்சில் தடுப்புக் காவலில் இருந்தார். சிறையில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டு வந்ததோடு, அவரை தனது சொந்த ஊரில் அடக்கம் செய்வதையும் நிர்வாகம் மறுத்தது.

கிழக்கு கெய்ரோவில் கடும் பாதுகாப்புடன் முர்சியில் உடல் கடந்த செவ்வாய் காலை அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எகிப்து அரசு விவகாரம் மற்றும் நீதித்துறையில் ஒருமைப்பாட்டில் ஐ.நா தலையிட முயற்சிப்பதாக ஹாபிஸ் குற்றம்சாட்டினார். “எந்த ஆதாரமும் இன்றி பொய்யான பரிந்துரைகளை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து தனது சிறைக்கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தும் கடப்பாட்டை பெற்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் இந்த வார ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முர்சியின் மரணத்திற்கு எகிப்து தலைமையே காரணம் என்று அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குற்றம்சாட்டியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட பல மனித உரிமைக் குழுக்களும் இந்த சுயாதீன விசாரணை ஒன்றை வரியுறுத்தியுள்ளன.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை