அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதனைக் காண சுமார் 20 ஆயிரம் பேர் புளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர். ‘மேலும் நான்கு ஆண்டுகள்’ என்றும் ‘அமெரிக்கா’ என்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்தனர்.

பெரிய தொலைக்காட்சி திரைகள், உணவு வண்டிகள், கஸ்லர்ஸ் எனும் வாத்தியக் குழு என பெரும் கொண்டாட்ட நிகழ்வாகப் புளோரிடாவில் பேரணி நடந்தேறியது.

ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அப்போது கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை சொந்த மாநிலமான புளோரிடாவில் வெற்றிபெறுவது டிரம்புக்கு மிக முக்கியமாகும்.

2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் அங்கு ஒன்றரை வீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றிபெற்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெறச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தனது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டாவது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தேர்தல் பிரசாரம் சிக்கலான 18 மாத காலத்தின் ஆரம்பம் என கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 50 வீத அங்கீகாரத்தைப் பெற்றதே இல்லை. அத்தோடு, பல்வேறு வாக்காளர் கருத்துக்கணிப்புகளிலும் ஜனநாயகக் கட்சியினரைவிட அவர் பின்தங்கியே உள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை