கொட்டும் மழையிலும் பிரமாண்ட வரவேற்பு

சுமார் ஐந்து மணிநேர விஜயத்தை முடித்து நேற்றே நாடு திரும்பினார்

24 மணிநேரத்தில் இரு நாடுகள், 15 நிகழ்வுகளில் மோடி பங்கேற்பு

உத்தியோகப்பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், இராணுவ அணிவகுப்பு, பீரங்கி வேட்டுகளுடன் இந்தியப் பிரதமர் மோடி வரவேற்கப்பட்டார்.

நேற்றுக் காலை 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மோடியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். இவருடன் முக்கிய அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அசோக அபேசிங்க ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

பிரதமர் மோடி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேரடியாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு சென்று, குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸார் மற்றும் முப்படையினருடன் இந்திய இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது.

இரண்டாவது தடவையாக இந்தியவின் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, தனது முதலாவது வெளிநாட்டு பயணமான மாலைதீவு விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க செங்கம்பள வரவேற்பளித்திருந்தார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இராஜங்க அமைச்சர் அசோக அபேசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உட்பட இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் இங்கு குழுமியிருந்தனர்.

முற்பகல் 11.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முக்கிய அதிதிகள் வருகைதரும் புத்தகத்தில் இந்தியப் பிரதமர் கையொழுத்திட்ட பின்னர், பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையூடாக அழைத்துவரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து இந்திய பிரதமரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே காரிலேயே பயணம் செய்தனர். வரும் வழியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு, கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாயலத்துக்கும் இந்தியப் பிரதமர் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித், அமைச்சர் சஜித் பிரேமதாஸ உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

அந்தோனியார் ஆலயத்திலிருந்து பி.ப. 12.15 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரமருக்கு கொட்டும் மழையில் முப்படையினரின் அணிசூழ இராணுவ அணிவகுப்புடன் ஜனாதிபதியால் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் 21 மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன. வரவேற்பு நிகழ்வில் கடுமையாக மழை கொட்டியதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இந்தியப் பிரதமரை குடை பிடித்து அழைத்துச் சென்றார்.

வரவேற்பு நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரமசிங்க, மனோகணேசன், பழனி திகாம்பரம், ஜோன் அமரதுங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் உட்பட இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் குழுமியிருந்தனர். வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட இலங்கை அமைச்சர்களுக்கு இந்தியப் பிரதமர் கைலாகு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைலாகு கொடுத்தார்.

பி.ப. 12.15 முதல் 12.30 மணிவரை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வினை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருதரப்புப் பேச்சுகளுக்காக பிரதமர் மோடியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். சம்பிரதாய மரபுகளுகளின் பிரகாரம் ஜனாதிபதி மாளிகையில் அசோக மரமொன்றை இந்தியப் பிரதமர் நட்டுவைத்தார்.

அதன் பின்னர் 12.45 மணியளவில் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலானப் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இப்பேச்சுவார்த்தையில் பிரதமர் உட்பட இலங்கையின் முக்கிய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கையில் அமைந்துள்ள இந்திய இல்லம் சென்ற பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட சில அரசியல் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச தலைவராகவும், இரண்டாவது பிரதமராக பதவியேற்ற கையுடன் இந்திய பிரதமரின் வருகை அமைந்ததாலும் கொழும்பு உட்பட கொழும்பின் புறநகர் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததடன், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த மாதம் 30ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பின் பிரகாரமே பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபின் நேற்று முன்தினம் மாலைதீவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று இலங்கைக்கு வருகை தந்து சுமார் 5 மணிநேரமே இலங்கையில் தங்கியிருந்தார். 24 மணிநேரத்தினுள் இரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்த மோடி 15 உத்தியோகபூர்வ சந்திப்புக்களை நடத்தியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை