பயங்கரவாதத்திற்கு எதிராக 'இலங்கையர்' என்ற வகையில் நாம் ஒன்றிணைவோம்

அனைத்து பேதங்களையும் மறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து மீள் எழுச்சி பெரும் கம்உதாவ சகலருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ வெதிவெவவில் 24வீடுகளைக் கொண்டு நிர்மாணித்த 197வது மாவீரர் சுரணிமலகம மாதிரிக் கிராமத்தினைமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், எமதுநாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகல பயங்கரவாத குழுக்களையும் அரசாங்கம் என்ற வகையில் தோற்கடித்துள்ளோம். இன்னும் யாராவது இருப்பார்களேயானால் இவர்கள் தொடர்பாகவும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் நிம்மதியை சீர்குழைக்க முயற்சிக்கும் சகலரும் தோற்கடிக்கப்படுவர். இதற்காக நாம் தேவையற்ற விதத்தில் நாட்டினுள் இன, மத கலவரங்களை ஏற்படுத்த தேவையில்லை. இவ்வாறான இனக் கலவரங்களை ஏற்படுத்தினால் அதனாலும் நட்டம் ஏற்படப் போவது எமது நாட்டிற்கே.

ஒருசில மத்திய கிழக்குநாடுகள் பயங்கரவாதத்தினாலும் யுத்தத்தினாலும் அழிவிற்குள்ளானதை போன்று எமது நாட்டையும் அழிவிற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கவேண்டாம். இந்த நாடு எமது சகலரினதுமாகும். இதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எமதுதாய் நாட்டை பாதுகாக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்.

மேலைத்தேய நாடுகள் எமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டினுள் நுழைய முயற்சி செய்கிறார்கள்.

இதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை தோல்வியுறச் செய்யவேண்டும். எமது பாதுகாப்புத் தரப்பினருக்கு பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக சகலவசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய மதத்தவர்களது சொத்துக்களை அழித்து அவற்றிற்கு தீ மூட்டி அவர்களுக்கு தொந்தரவு செய்து இந்தநாட்டை பாதுகாக்க முடியாது என்றார்.

ஹம்பாந்தோட்டைகுறுாப் நிருபர்

 

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை