மட்டு. கெம்பஸ்: பாதுகாப்பு பல்கலையாக மாற்ற நிதி

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு கெம்பஸை அரசாங்க பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றுவதாயின் அதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்நின்று செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு

கெம்பஸை அரசாங்க பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரி ஒரு மில்லியன் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் திட்டத்தின் இலக்கை அடைந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு மில்லியன் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் மகாசங்கத்தினர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.

குறித்த பல்கலைக்கழகத்தை அரச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால சமர்ப்பித்திருந்த தனிநபர் பிரேரணை ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதால், சகல உறுப்பினர்களும் இந்த நிலைப்பட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய அச்சம் காணப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் இந்தப் பல்கலைக்கழகத்தை பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதாக இருக்கும். அடிப்படைவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களிடமிருந்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் எதிர்காலத்தில் பாதுகாக்க இது உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

 

 

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை