தவறிழைத்தாலும் பாதுகாப்போமென்பதையே வெளிப்படுத்தியுள்ளது

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமது பதவிகளை இராஜினாமாச் செய்ததன் பின்னணியில் சர்வதேச சக்தியொன்று இருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது.

இவர்களின் பின்னால் இருக்கும் சர்வதேச சக்தி யார்? என்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடிக்க வேண்டுமென எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பாக தினேஷ் குணவர்த்த எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எவரும் முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றஞ்சாட்டவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை விரோதிகளாகப் பார்க்கவில்லை, ஆனால் பயங்கரவாதிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுங்கள் என்ற கோரிக்கையே வலுப்பெற்றது.

எனினும், விசாரணைகளுக்குப் படிப்படியாக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக ஊடகங்களில் நாம் அறிந்துகொண்டோம். அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளை பாதுகாக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களையும் காண முடிந்தது. இதனால் முஸ்லிம் சமூகம் தொடர்பில் வைராக்கியம் ஏற்பட்டது. இதனால் முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் சாதாரண முஸ்லிம் சமூகத்தினர், அடிப்படைவாதத்தைக் கொண்ட பயங்கரவாதிகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டிய தேவையே அன்று எமக்கு இருந்தது. இருந்தபோதும், பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் உறுப்பினர்களும் 9 அமைச்சர்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக நாம் குற்றஞ்சாட்டவில்லை. ஒரேயொரு அமைச்சருக்கு எதிராக குறிப்பிட்ட திகதிகள் உள்ளிட்ட தகவல்களுடன் 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இம்மாதம் 18ஆம் திகதி விவாதிக்க திகதி தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கம் தெரிவுக்குழுவை அமைத்து அமைச்சரை குற்றமற்றவராக்குவதற்குப் பார்த்தது. பாராளுமன்றத்தில் 25ற்கும் அதிகமான நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். எந்தவொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் எதிராக தெரிவுக்குழு அமைக்கப்படவில்லை.

ரிஷாட் பதியுதீனை பதவிவிலக்குமாறு கோரி அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதன்போது ஏனைய முஸ்லிம் உறுப்பினர்கள், ரிஷாட் பதியுதீனை பதவியிலிருந்து விலகுமாறே ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். எனினும். இதற்கு மாறாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதன்மூலம் அவர்கள் உலகத்துக்கு வழங்கியிருக்கும் செய்தி என்னவெனில், எவர் ஒருவர் பாரிய தவறிழைத்திருந்தாலும் அவருக்கு எதிராக கைவைக்க முடியாது, அவரை தாம் பாதுகாப்போம் என்பதாகும்.

இந்தச் செயற்பாட்டின் மூலம் சாதாரண முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சிந்திக்கச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்று என்ற செய்தி சமூகத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இதன் ஊடாக முஸ்லிம்களின் கடைகளை புறக்கணிப்பது கூடுமா? குறையுமா? என்பதை பதவிவிலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மகேஸ்வரன் பிரசாத்​

 

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை